

டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்கா உள்ளிட்ட இன்னும் சில நாடுகளின் பிரிவுகளை வாங்க அமெரிக்காவின் ஆரக்கிள் நிறுவனம் ஆர்வம் காட்டியுள்ளதாகவும், பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிகிறது.
டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்கப் பிரிவை 90 நாட்களுக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஆணையைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டிக்டாக்கை வாங்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் க்ளவுட் கம்ப்யூட்டிங் துறையில் முன்னணியில் இருக்கும் ஆரக்கிள் நிறுவனமும் டிக்டாக்கை வாங்க முயற்சித்து வருவதாக செய்திகள் வந்துள்ளன.
டிக்டாக்கின் சீன உரிமையாளரான பைட் டான்ஸ் நிறுவனத்திடம் ஆரக்கிள் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் இருக்கும் டிக்டாக்கின் பிரிவுகளை வாங்க தீவிர ஆர்வம் காட்டி வருவதாகவும் செவ்வாய் அன்று வெளியான செய்தி தெரிவிக்கிறது.
ஜெனரல் அட்லாண்டிக், செகுயா கேபிடல் உள்ளிட்ட முதலீட்டாளர்களோடு சேர்ந்து ஏற்கனவே பைட் டான்ஸ் நிறுவன பங்குகளை வைத்திருக்கும் அமெரிக்க முதலீட்டாளர்களையும் கூட்டு சேர்த்துக் கொண்டு ஆரக்கிள் இந்த முயற்சியைத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நெருக்கமான நிறுவனம் என்று கூறப்படும் ஆரக்கிள், இணையம் வழியாக கணினி செயல்பாட்டைத் தரும் க்ளவுட் கம்ப்யூட்டிங் சேவையில் உலகளவில் முன்னணியில் இருக்கும் நிறுவனம். டிக்டாக்கை வாங்குவதன் மூலம் பயனர்கள் பற்றிய விவரங்கள், தரவுகள் சேகரிக்கப்பட்டு அவையும் வியாபாரத்துக்குப் பயன்படுத்தப்படும், இதனால் அந்நிறுவனத்துக்கு ஆதாயமே என்று துறை நோக்கர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக டிக்டாக்கை வாங்கும் பந்தயத்தில் ட்விட்டர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் மைக்ரோசாப்ஃட் நிறுவனத்துக்கான வாய்ப்புகள் இதில் 20 சதவீதம் மட்டுமே இருக்கிறது என்றும், மைக்ரோசாஃப்ட் கூறிய விலை மிகக் குறைவாக இருப்பதாகவும் சீன நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.