

பிரபல தொழில்நுட்ப வல்லுநரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், விக்கிபீடியாவில் இருக்கும் தன் பக்கத்தில் தன்னை திட்டச் சொல்லி கோரிக்கை வைத்துள்ளார்.
நெட்டிசன்களின் முக்கியமான தகவல் களஞ்சியமாக விக்கிபீடியா தளம் திகழ்கிறது. குண்டூசி முதல் விமானம் வரை கிட்டத்தட்ட அனைத்து முக்கியமான விஷயங்கள் பற்றிய விவரங்களும் இந்தத் தளத்தில் கிடைக்கும். பலரது கூட்டு முயற்சியால் உருவாகியிருக்கும் விக்கிபீடியாவில், ஒரு பக்கத்தை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். அதில் இருக்கும் தகவல்களை மாற்றியமைக்கலாம். இதனால் அந்தத் தளத்தின் நம்பகத்தன்மை எப்போதுமே கேள்விக்குறிதான்.
இதைச் சுட்டிக் காட்டும் வண்ணம் "வெற்றி பெற்றவர்களால் வரலாறு எழுதப்படுகிறது. விக்கிபீடியாவைத் தவிர" என்று ஞாயிற்றுக்கிழமை அன்று எலான் மஸ்க் ட்வீட் செய்திருந்தார். தொடர்ந்து, "தயவு செய்து விக்கிபீடியாவில் என்னைத் திட்டுங்கள். உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்" என்று இன்னொரு ட்வீட்டைப் பகிர்ந்தார்.
இதைப் பலர் ஏற்றுக்கொண்டு விக்கிபீடியா தளத்தில் எலான் மஸ்க் பற்றிய பக்கத்துக்குச் சென்று, தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தகவல்களை மாற்றி, சேர்த்து, அதன் ஸ்க்ரீன்ஷாட்டை மஸ்கிடம் பகிர்ந்தனர்.
"கடந்த நூற்றாண்டின் எல்லா முக்கிய போர்கள், நோய்கள், நிதி நெருக்கடிகளுக்கு மஸ்க்கோ அல்லது அவரது நிறுவனங்களில் ஒன்றோ தான் நேரடியாகக் காரணம் என்று சொல்லலாம்" என்ற விவரத்தைச் சேர்த்தார் ஒரு பயனர். இப்படிப் பலரும் பகிர ஆரம்பிக்க மஸ்க் பக்கத்துக்கு வருகை தருபவர்கள் எண்ணிக்கை அதிகமானது.
எனவே அந்தப் பக்கத்தில் மேற்கொண்டு எந்த விதமான மாற்றங்களும் செய்ய முடியாதபடி அதைக் கட்டுப்படுத்தியது விக்கிபீடியா தரப்பு.
விக்கிபீடியாவை மஸ்க் சாடுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே ஒரு முறை, "பல வருடங்களில் முதல் முறையாக விக்கிபீடியாவில் இருக்கும் என்னைப் பற்றிய பக்கத்தைப் பார்த்தேன். முட்டாள்தனமாக இருந்தது. யாராவது அதில் இருக்கும் முதலீட்டாளர் என்ற சொல்லை நீக்குங்கள். ஏனென்றால் நான் முதலீடு செய்வதே இல்லை" என்று மஸ்க் கூறியிருந்தார்