

ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டியதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கின் சொத்து மதிப்பு முதல் முறையாக 100 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது.
இதுவரை இருந்த சாதனைகள் அனைத்தையும் உடைத்து, உலகிலேயே மிக அதிக சந்தை மதிப்பு இருக்கும் நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் உருவெடுத்துள்ளது. இதற்கு முன் சவுதி அரேபியாவின் சவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் தான் இந்தப் பெருமையைப் பெற்றிருந்தது. 1.84 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிகமாக ஆப்பிள் நிறுவனம் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் ஜெஃப் பெஸோ (187 பில்லியன்), பில்கேட்ஸ் (121 பில்லியன்), மார்க் ஸக்கர்பெர்க் (102 பில்லியன்) ஆகியோருடன் ஒப்பிடும்போது டிம் குக் வெகு தூரத்தில் இருக்கிறார். ஆப்பிள் நிறுவனத்தின் 8,47,969 பங்குகள் குக் வசம் உள்ளன. கடந்த வருடம் தனது சம்பளத்தின் பகுதியாக 125 மில்லொஇயன் அமெரிக்க டாலர்களை டிம் குக் பெற்றார்.
இன்னொரு பக்கம் உலகிலேயே 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புப் பெற்ற முதல் நிறுவனம் என்ற பெருமையை நோக்கி ஆப்பிள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பைப் பெற்ற முதல் அமெரிக்க நிறுவனமாக ஆப்பிள் உருவெடுத்தது நினைவுகூரத்தக்கது.