Last Updated : 31 Jul, 2020 05:04 PM

Published : 31 Jul 2020 05:04 PM
Last Updated : 31 Jul 2020 05:04 PM

ஸ்மார்ட் வீடியோ காலிங் பெல்: வெளியில் நிற்பது யார்?

2012-ம் ஆண்டு ஜேம்ஸ் சைமன் என்னும் தொழிலதிபர் அமெரிக்காவில் முதன்முதலாக வீடியோ அழைப்பு மணியை ‘ரிங் வீடியோ பெல்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தினார். வயர் வீடியோ காலிங் பெல், வயர்லெஸ் வீடியோ காலிங் பெல், ஸ்மார்ட் வீடியோ காலிங் பெல் என்று இதில் மூன்று வகைகள் உள்ளன.

ஸ்மார்ட் வீடியோ காலிங் பெல்

அழைப்பு மணியும் பாதுகாப்பு கேமராவும் இண்டர்காமும் இணைந்த கையடக்க அளவிலான அமைப்பே இன்றைக்குச் சந்தையில் பரவலாகக் கிடைக்கும் ஸ்மார்ட் வீடியோ காலிங் பெல். இதில் கேமராவுடன் இணைந்து ஒரு மைக்கும் ஸ்பீக்கரும் உண்டு. இதற்கென்று தனியே ஒரு செயலி உண்டு. இந்தச் செயலியை நாம் நமது கைப்பேசியில் நிறுவிக்கொள்ள வேண்டும். இதன் பொத்தானை அமுக்கியவுடன் சாதாரண அழைப்பு மணியைப் போன்று சத்தம் எழுப்பும்.

அதே நேரம் நம் கைப்பேசியிலும் அதன் செயலி விழித்துக்கொண்டு நம்மை உஷார்படுத்தும். அந்தச் செயலியைத் திறந்தவுடன் வெளியில் நிற்பவரின் உருவம் நம் கைப்பேசியில் தெரியும். வழக்கமான கைப்பேசியில் பேசுவது போன்று நாம் அவர்களிடம் உரையாடவும் முடியும். தெரிந்தவர் என்றால் வருகிறேன் சற்றுக் காத்திருங்கள் என்று சொல்லலாம். தெரியாதவர் என்றால் அவரைப் பற்றிய தகவலைக் கேட்டு அறிந்து முடிவு செய்யலாம்.

செயல்திறன்

புளுடூத் இணைப்போ வயர்லெஸ் இணைப்போ இதற்கு அவசியம். இதன் செயலியைக் கொண்டு நேரடியாகக் கைப்பேசியுடனும் இணைக்கலாம்; ஸ்மார்ட் ஹப்புடனும் இணைக்கலாம். புளுடூத் இணைப்பு என்றால் அதன் செயல்திறன் 40 மீட்டருக்குள் சுருங்கும். வயர்லெஸ் இணைப்பு என்றால் அதை எங்கிருந்தும் இயக்கலாம். இதன் கேமரா 180 டிகிரி பார்க்கும் திறன் கொண்டது. இந்த கேமராவால் பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் பார்க்க முடியும். ஸ்மார்ட் ஹப்புடன் இணைத்தால் நம்மால் IFTTT வசதியை உபயோகப்படுத்த முடியும். உதாரணத்துக்கு நமது நண்பரோ உறவினரோ பொத்தானை அமுக்கி இருந்தால் நாம் இந்த IFTTT வசதியின் மூலம் கதவில் உள்ள ஸ்மார்ட் பூட்டைத் திறக்கும்படி செய்யலாம்.

நிறுவும் முறை

இந்த ஸ்மார்ட் சாதனம் DIY (Do it yourself) வகையைச் சார்ந்தது. கதவிலோ சுவரிலோ இரண்டு துளைகள் போடத் துளையிடும் கருவி மட்டும் போதும். பழைய அழைப்பு மணி பொருத்திய இடத்தில் பொருத்தினால் அந்த வேலையும் மிச்சமாகும். பிறகு, அதன் செயலியைக் கைப்பேசியில் தரவிறக்கம் செய்ய வேண்டும். இந்தச் செயலியை நிறுவுவது மிகவும் எளிதானது. ஏனென்றால், அது தன்னைத்தானே நிறுவிக்கொள்ளும் திறன் கொண்டது. நம் வீட்டில் ஸ்மார்ட் ஹப் இருந்தால் அதனுடனும் இந்தச் செயலியைப் பயன்படுத்தி எளிதாக இணைத்துக் கொள்ளலாம்.

சிறப்பம்சங்கள்

கதவின் வெளியே நிற்பவர் யார் என்பதை நாம் உலகின் எந்த மூலையிலிருந்தும் அறிந்து அவர்களுடன் பேசும் வசதியை நமக்கு இது அளிக்கிறது. பணியாள் எத்தனை மணிக்கு வேலைக்கு வருகிறார் எத்தனை மணிக்கு வெளியே செல்கிறார் என்பதை நாம் கண்காணிக்க முடியும். பள்ளியிலிருந்து நம் குழந்தைகள் பத்திரமாக வீடு திரும்பிவிட்டதையும் நாம் உறுதிசெய்துகொள்ள முடியும். வீட்டில் யாரும் இல்லாதபோது நமக்கு ஏதும் கடிதமோ பார்சலோ வந்தால் அதில் உள்ள IFTTT வசதி மூலம் வெளிக் கதவை மட்டும் திறந்து அவற்றை உள்ளே வைத்துவிட்டு அவர்களைப் போகச் செய்ய முடியும். மேலும், இதில் பேசுவதைப் பதிவுசெய்யும் வசதியும் இருப்பதால், விருந்தாளிகள் தங்கள் தகவலை அதில் பதிவுசெய்துவிட்டுச் செல்ல முடியும்.

இதன் விலை

இந்த வகை அழைப்பு மணிகள் ஆறாயிரம் முதல் முப்பதாயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கின்றன. தயாரிக்கும் நிறுவனங்களின் மதிப்பு, கேமராவின் தரம், பதிவுசெய்யும் திறன் ஆகியன அடிப்படையில் இதன் விலை மாறுபடுகிறது. ரிங் வீடியோ பெல், ஆகஸ்ட் ஹோம், டோர் பேர்ட், கோ கன்ட்ரோல், ஹீத் செனித், ஸ்கைபெல் டெக்னாலஜி, விவிண்ட், சுமொடொ போன்ற நிறுவனங்களின் வீடியோ அழைப்பு மணிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x