Last Updated : 02 Sep, 2015 05:51 PM

 

Published : 02 Sep 2015 05:51 PM
Last Updated : 02 Sep 2015 05:51 PM

ஆவலை வீசுவோம் 11 - ரேடியோ தேடல்: இசை எங்கிருந்து வருகிறது?

| வானொலி நிலையங்களையும் இணைய வானொலியையும் தேட உதவும் தேடியந்திரங்கள். தேட மட்டும் அல்ல, ஒரே கிளிக்கில் பாடல்களை கேட்க கூடிய வலை இசைகேட்பு சாதனங்களும் கூட. |

காணொளிகளின் காலத்தில் வானொலிகள் பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கலாமே தவிர முற்றிலுமாக மறைந்துவிடவில்லை. இன்னும் வானொலி நிலையங்களும் இருக்கின்றன; பழையகால வானொலி நிலையங்கள் தவிர, பண்பலை வானொலி மற்றும் இணைய வானொலி என எண்ணற்றவை இருக்கின்றன.

எம்பி3 யுகத்திலும் கூட வானொலியில் பாட்டு கேட்பது அலாதியான சுகம் தான். இணைய யுகத்தில் அந்த காலம் போல ஆல் இந்திய ரேடியோவும், இலங்கை வானொலியையும் மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய கட்டுப்பாடும் இல்லை. உள்ளூர் வானொலியில் இருந்து உலகில் எந்த மூலையிலும் உள்ள வானொலியையும் கேட்டு மகிழலாம்.

உலக வானொலிகளை எப்படி கண்டறிவது? அறிந்தாலும் எப்படி கேட்பது?

இரண்டு கேள்விகளுக்கும் இசைமயமான பதிலாகிறது ரேடியோசர்சிஞ்சின்.காம் ( >http://radiosearchengine.com).

பெயர் உணர்த்துவது போல இது வானொலிகளை கண்டறிவதற்கான தேடியந்திரம். இசைப்பிரியர்களை உண்மையில் இது மெய்மறக்க வைத்துவிடும். அதை உணர, ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொள்ளுங்கள். இப்போது, உலகில் எங்கெல்லாம் யாரெல்லாம் பாடல்கள் கேட்டுக்கொண்டிருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். நள்ளிரவில் ஒளிரும் நகரத்து ஒளி விளக்குகளை பறவை பார்வையாக பார்ப்பது போது பூமி பந்தில் பாடல்கள் கேட்கப்படும் இடங்களை எல்லாம் கண்முன் நிறுத்திப்பாருங்கள். இசையின் வானவில் வண்ணங்கள் மனதில் அலைமோதுகிறதா? இப்படி ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல்களில் உங்களுக்கு பிடித்ததை கண்டுபிடித்து கேட்க முடிந்தால் எப்படி இருக்கும்?

அட, அற்புதமாகத்தான் இருக்கும் என சொல்லத் தோன்றுகிறதா? எனில், ஏறக்குறைய இதே அற்புதத்தைதான் ரேடியோசர்சிஞ்சின் சாத்தியமாக்குகிறது.

ஆம், உலகில் இப்போது வானொலிகளில் கேட்டு ரசிக்கப்படும் பாடல்களை எல்லாம் இது அடையாளம் காட்டுகிறது.

அடிப்படையில் வானொலி தேடியந்திரமான இது, அந்த தேடலை படி மேலே எடுத்துச்சென்று விடுகிறது என்பது தான் விஷயம். இதில் வானொலி நிலையங்களை எப்படி வேண்டுமானாலும் தேடிப் பார்க்கலாம் - பாடகரின் பெயர், இசை வகை, பாடல் வரி என எப்படி வேண்டுமானாலும் தேடலாம். இப்படி தேடும் போது இதோ இந்த நிமிடத்தில் எந்த வானொலியில் அந்த பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறதோ அந்த வானொலியை ஒலிபரப்புகிறது.

எந்த வானொலியிலும் பாடல் இல்லையா? அந்த பாடல் வரும் காலத்தில் எந்த வானொலியில் ஒலிபரப்பாகும் வாய்ப்பிருக்கிறது என ஒரு பட்டியலை பரிந்துரைக்கிறது.

இளையராஜா பாடலை கொண்டுவா என்றால், இப்போது எந்த வானொலியிலும் பாடல் இல்லை என அநியாயத்திற்கு பொய் சொல்லி ஏமாற்றுகிறது என்றாலும், பாப் மார்லியும், மரியா கேரேவையும் டைப் செய்தால் கச்சிதமாக பட்டியல் கொடுக்கிறது.

தேடிய பாடல் கிடைத்து விட்டதா, அதைக் கேட்டு ரசிக்க வேறு எங்கும் செல்லவும் வேண்டாம். இந்த தேடியந்திரத்தின் கீழேயே வலை இசைகேட்பு சாதனம் (வெப் பிளேயர்) இருக்கிறது. தேர்வு செய்த பாடல் தானாக ஒலிபரப்பாகத் துவங்கிவிடும். இந்த சாதனத்திலேயே முன்னும் பின்னும் போகும் வசதி இருக்கிறது. அது மட்டுமா? ஒலிபரப்பாகும் பாடல் பிடிச்சிருக்கு என்று லைக் செய்தால் அதனடிப்படையில் நமக்கான பாடல்கள் ஒலிபரப்பாகும் வானொலிகளை பரிந்துரைக்கிறது.

பாண்டோரா பரிந்துரை போல இது துல்லியமானது இல்லை என்றாலும், புதிய இசையை கண்டறிய நிச்சயம் உதவும். வானொலி மற்றும் இணைய வானொலி நிலையங்களை பட்டியலிட்டு தேவையானதை தேடித்தரும் வழக்கமான தேடியந்திரங்களில் இருந்து இது மிகவும் மாறுபட்டது; மேம்பட்டது.

ரேடியோசர்சிஞ்சின் வானொலிகளை பட்டியலிடும் தளம் மட்டும் அல்ல, இது வானொலிகளுக்கான கூகுள் என்கிறார் இதன் நிறுவனர் மைக்கேல் ராபர்ட்சன்.

கூகுள் எப்படி கிட்டத்தட்ட எல்லா இணையதளங்களையும் பட்டியல் போட்டு வைத்துக்கொண்டு அவற்றில் இருந்து பொருத்தமானவற்றை தேடித்தருகிறதோ, அதேபோல இந்த தேடியந்திரம் இசை உலகில் வானொலி நிலையங்களை எல்லாம் தனக்குள்ளே பட்டியல் போட்டு வைத்திருக்கிறது. சில நிமிடங்களுக்கு ஒரு முறை அவற்றில் இப்போது ஒலிபரப்பாகும் பாடல்களை அப்டேட் செய்து நினைவில் ஏற்றிக்கொள்கிறது. அதன் பயனாகத்தான் பாடகர் அல்லது பாடல் பெயரை தட்டியதுமே எந்த வானொலியில் அந்த பாடல் ஒலிக்கிறது என சொல்லி விடுகிறது.

இப்படி ஏற்கனவே ஒலிபரப்பான பாடல்களையும் நினைவில் நிறுத்தியிருப்பதால் ஒரு பாடலை டைப் செய்ததும் அது வரும் காலங்களில் ஒலிபரப்பாவதற்கான வாய்ப்பை பரிந்துரைக்கிறது.

வானொலிகளில் ஒலிபரப்பாகி கொண்டிருக்கும் எல்லா பாடல்களையும் தொகுத்து கொண்டிருப்பது சாதாரண விஷயம் இல்லை என்கிறார் ராபர்ட்சன். இவரது தேடியந்திர வலைசிலந்திகள் தங்களை காதுகளை திறந்துவைத்துக் கொண்டு இந்த பணியை ஓயாமல் செய்து கொண்டிருக்கின்றன.

ராபர்ட்சன் இணைய தொழில்முனைவர் வகையை சேர்ந்தவர். ஏற்கனவே இவை துவக்கிய இரண்டு இசை தளங்கள் காப்புரிமை சிக்கலால் முடக்கப்பட, மனம் தளராமல் இந்த தேடியந்திரத்தை உருவாக்கியிருக்கிறார்.

ரேடியோசர்சிஞ்சின் தேடியந்திரத்தின் இன்னொரு சிறப்பு, உள்ளே நுழையும் போதே நமக்கான வானொலிகளின் பட்டியலை முன்வைத்து வரவேற்கிறது. வருகைதருபவரின் இருப்பிடத்தை உணர்ந்து அந்தப் பகுதிக்கான வானொலி நிலையங்கள் பட்டியலிடப்படுகின்றன.

சென்னையில் இருந்து அணுகினால் சூரியன் எப்.எம்மில் துவங்கி சமூக வானொலி, பாலிவுட் வானொலி என எல்லாம் வருகின்றன. பண்பலை, இணைய வானொலி என எல்லாம் இருக்கின்றன.

இந்தப் பட்டியல் மையமாக தோன்ற, இரு பக்கத்திலும் வால் போல முன்னணி பாடல்களின் பட்டியல் மற்றும் பிரபலமான டாக்‌ஷோக்களின் பட்டியலையும் பார்க்கலாம். நமக்கான வானொலி சேவையை உருவாக்கிக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. இதில் நாம் விரும்பும் வானொலியை சேர்த்துக்கொள்ளலாம்.

ஒரு கிளிக்கில் விரும்பிய வானொலியில் பாடல் ஒலிபரப்பாவதும், ஒவ்வொரு கிளிக்காக வானொலிகளை மாற்ற முடிவதும் அற்புதமான அனுபவம்.

வானொலி தொடர்பாக இன்னும் சில தேடியந்திரங்களும் இருக்கவே செய்கின்றன. அவற்றில் ரேடியோ லொகேட்டர், ரேடியோ டியூனா,உபெர் ஸ்டேஷன்ஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ரேடியோ லொக்கேட்டர் ( >http://www.radio-locator.com/). இதில் ரேடியோசர்சிஞ்சின் போல விரிவான வசதிகளை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. இது மிகவும் எளிமையானது. வானொலி நிலையங்களை மட்டும் தேடித்தருகிறது. அமெரிக்காவை பிரதானமாக கொண்டது என்றாலும் அகில உலகமும் முழுவதும் உள்ள (நமது அகில இந்திய வானொலி உட்பட) வானொலி நிலையங்களை இதில் தேடலாம். அமெரிக்காவில் வசிப்பவர்கள் எனில் அந்நாட்டில் மாநில வாரியாக வானொலி நிலையங்களை தேடலாம். நகரவாரியான தேடல் வசதியும் இருக்கிறது. கனடாவுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது.

மற்ற நாட்டில் உள்ளவர்களும் கவலைப்பட வேண்டாம், தேடல் பட்டியலில் அவர்கள் நாட்டை தேர்வு செய்து வானொலி நிலையங்களை தேடலாம். இந்தியாவில் ஆகாச வாணி உட்பட 18 வானொலி நிலையங்கள் வருகிறது. முழுமையான பட்டியல் என்று சொல்வதற்கில்லை. விடுப்பட்ட நிலையங்களில் பட்டியலில் சமர்பிக்கும் வசதியும் இருக்கிறது.

இணைய வானொலிகளை இசை வகை கொண்டு தேடவும் செய்யலாம். (எல்லாம் ஒரே மேற்கு நெடி) இந்த வானொலி நிலையங்களில் இணைய ஒலிபரப்பு உள்ளவற்றையும் அறியலாம். மொத்தம் 13,900 வானொலி நிலையங்கள் மற்றும் 9200 இணைய ஒலிபரப்புகள் பற்றிய தகவல் உள்ளன.

உபெர்ஸ்டேஷன்ஸ் ( >http://uberstations.com/) இது ரேடியோ லோக்கேடரை விட மேம்பட்டது. ஆனால் ரேடியோசர்சிஞ்சின் அளவு இல்லை. இதன் முகப்பு பக்கம் எளிமையாக இருந்தாலும் வண்ணமயமானது; இதுவே ஒரு வெப் பிளேயர் உணர்வை தரக்கூடியது.இதிலும் மைய பகுதியில் நம் நாட்டு வானொலிகளின் பட்டியல் வரவேற்கிறது. (ஆனால் அத்தனை முழுமையானது அல்ல). மேலே உள்ள தேடல் கட்டத்தில் விரும்பிய இசை வகைக்கான வானொலியை தேடலாம். தேர்வு செய்யும் வானொலியை இங்கேயே கேட்கும் பிளேயர் வசதியும் இருக்கிறது. மைய பட்டியலில் புதியவை கேட்டால் நொடிக்கொரு முறை வானொலிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன.

ரேடியோடியூனா ( >http://radiotuna.com/ ) எளிமையான தேடியந்திரம். இதன் தேடல் கட்டத்தில் பாடலை வகையை தட்டினால் பொருத்தமான வானொலிகளை பட்டியலிடுகிறது. பிரிட்டனை சேர்ந்த இசைப்பிரியர்கள் மூவர் உருவாக்கியது இது.

முந்தைய அத்தியாயம்:>ஆ'வலை' வீசுவோம் 10 - நம்மை கண்காணிக்காத தேடியந்திரம்

சைபர்சிம்மன், இணைய வல்லுநர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x