

முக்கியப் பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதில் வெட்கப்படுகிறோம், ஏமாற்றமடைந்துள்ளோம், எல்லாவற்றையும் விட வருத்தம் தெரிவிக்கிறோம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை அன்று, எலான் மஸ்க், பில்கேட்ஸ், ஜோ பீடன் உள்ளிட்ட அமெரிக்கப் பிரபலங்களின் ட்விட்டர் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டு க்றிப்டோ கரன்ஸி, பிட் காயின் மோசடிப் பதிவுகள் அந்தப் பக்கங்களில் பகிரப்பட்டன. க்றிப்டோ கரன்ஸியில் நன்கொடை அளிக்க வேண்டியும் பதிவுகள் இடப்பட்டன. இந்த ஹேக்கிங் எப்படி நடந்தது என்பது பற்றி எஃப்.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது ட்விட்டர் தரப்பிலிருந்து இதுகுறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், குறைந்தது 130 பயனர்களின் ட்விட்டர் கணக்குகளை ஹேக்கர்கள் குறிவைத்ததாகவும், இதில் 45 கணக்குகளின் பாஸ்வேர்டை மாற்றி, லாக் இன் செய்தே ட்வீட்டுகளைப் பகிர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"சம்பந்தப்பட்ட கணக்குகளில் என்ன நடவடிக்கைகள் நடந்திருக்கும் என்பதை உறுதிசெய்யத் தொடர்ந்து நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். மேலும், இதில் சில பயனர் பெயர்களை விற்கவும் ஹேக் செய்தவர்கள் முயன்றிருக்கலாம் என்று நம்புகிறோம்.
இதில் 8 கணக்குகளின் விவரங்களை ஹேக்கர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இப்படிப் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள கணக்குகளின் உரிமையாளர்களை நாங்கள் தொடர்பு கொண்டோம். என்ன செய்ய வேண்டும் என்று அவர்களிடம் கூறி வருகிறோம். இதில் எந்தக் கணக்கும் வெரிஃபை செய்யப்பட்ட கணக்கு அல்ல.
மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை ஹேக்கர்கள் பெற்றுள்ளனர். தற்போது பிரச்சினையைச் சரிசெய்யும் பொருட்டு முடக்கப்பட்டிருக்கும் கணக்குகள் விரைவில் அந்தந்தப் பயனர்களின் பயன்பாட்டுக்கு வரும்" என்று ட்விட்டர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இணையத் தாக்குதலுக்குப் பின்னால் ரஷ்யா, சீனா, வடகொரியா என எந்தத் தரப்பும் இல்லை என்றும், இது ஒரு இளைஞர் கூட்டத்தால் செய்யப்பட்டது என்றும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.