Published : 18 Jul 2020 03:01 PM
Last Updated : 18 Jul 2020 03:01 PM

இணையத்தில் பெருகும் ரம்மி விளையாட்டுகள்: ஏமாற வேண்டாம் மக்களே!

கரோனா பொதுமுடக்கத்தின் விளைவாகப் பல்வேறு துறையினர் வேலையிழந்து தவிக்கும் சூழலில், பலர் சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தை ‘ஆன்லைன் ரம்மி’ போன்ற இணைய சூதாட்டங்களில் இழந்து வருவது வேதனையளிக்கிறது.

தமிழகத்தில், பணம் கட்டிச் சூதாடுவது என்பது தண்டனைக்குரிய குற்றம். ஆனால், ஆன்லைன் ரம்மி என்ற பெயரில் பல நூறு செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் கொட்டிக் கிடக்கின்றன. அதுமட்டுமல்ல, பொதுவெளியில் துணிச்சலாக விளம்பரங்களும் வெளியிடப்படுகின்றன. இதன் பின்னணியில் இருக்கும் விஷச் சூழல் என்ன?

பொதுவாகவே ரம்மி செயலிகள், சூதாட்டம் (Gambling) என்று குறிப்பிடாமல் திறமையை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டு (Skill Based Games) என்றே தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கின்றன. ஆனால், சீட்டாட்டத்தில் திறமையைவிட அதிர்ஷ்டமே முக்கியமானது என்பார்கள். அதுவும், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் திறமை, நேர்மை என்பதற்கெல்லாம் எந்த அர்த்தமும் இல்லை.

இதுகுறித்து டிஜிட்டல் சமூக ஆய்வாளரும் சைபர் தொழில்நுட்ப நிபுணருமான வினோத் கூறுகையில், “ரம்மி செயலிகளில் இரண்டு வகை உண்டு. சிறிய நிறுவனங்கள் நடத்துவது முதல் வகை. டிஜிட்டல் மார்க்கெட்டில் ரம்மி செயலிக்கான கோடிங் தகவல்கள் இணையச் சந்தையில் கிடைக்கின்றன. சிறிய நிறுவனங்கள் ஒரு தொகை கொடுத்து அவற்றை வாங்கி தங்கள் செயலியை உருவாக்கும். உங்களிடமிருந்து பெறப்படும் தகவல்களை வைத்து இணையத்தில் இருக்கும் விளம்பர நிறுவனங்களிடமிருந்து சிறிய நிறுவனங்கள் பணம் பெறும். நீங்கள் விளையாடி ஒரு வேளை பணம் வென்றால் அதிலிருந்து ஒரு தொகையைக் கமிஷனாக எடுத்துக்கொள்ளும்.

இரண்டாவது வகை செயலிகள் கேம் தயாரிப்பையே தங்கள் தொழிலாகக் கொண்டுள்ள பெரு நிறுவனங்களால் உருவாக்கப்படும் ரம்மி செயலிகள். முதல் வகையைப் போலவே நம் தகவல்களை வைத்தும், நம்மிடம் கமிஷன் வாங்கிச் சம்பாதிப்பவைதான் இவையும். கூடவே, செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் நாம் ரம்மி விளையாடும்போது செயல்படும் விதத்தைக் கிரகித்துக்கொண்டு நம்மைத் தொடர்ந்து பணம் கட்ட வைத்து கடைசியில் மொத்தமாக இழக்கச் செய்யும் வித்தையையும் அந்தச் செயலிகளால் எளிமையாகச் செய்ய முடியும்.

உதாரணத்திற்கு, நீங்கள் ரூ.1,000 கட்டி விளையாடும்போது 10 முறை வெற்றிபெறுவீர்கள். ரூ.10,000 தொகையை வென்றிருப்பீர்கள். அப்போது ரூ.20,000 பரிசுத் தொகை என்ற ஆசை காட்டும் விளம்பரம் வரும். சரி, பத்து முறை தொடர்ந்து வெற்றி பெற்றுவிட்டோம். இதிலும் முயற்சி செய்வோம் என்று கையில் இருக்கும் மொத்தப் பணத்தையும் பந்தயமாக வைப்பீர்கள். தோற்றால் மொத்தப் பணமும் போய்விடும். ஆனால், இப்போது உங்கள் மூளை நீங்கள் ஒரு முறை தோற்றதைப் பற்றி யோசிக்காது, நீங்கள் பத்து முறை வெற்றிபெற்றதைப் பற்றித்தான் யோசிக்கும். இதுவே உங்களைத் தொடர்ந்து விளையாடத் தூண்டும் தந்திரம்.

மேலும், இந்தச் செயலிகளில் எதிரில் விளையாடுவது யார் என்றே தெரியாது. இவ்வளவு ஏன்? நம் எதிரில் விளையாடுவது மனிதர்தானா என்பது கூடச் சந்தேகம்தான். நுண்ணறிவு பெற்ற கணினிகள்கூட உங்களுக்கு எதிராக விளையாட வாய்ப்பிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நீங்கள் எடுக்கும் சீட்டுகளைக்கூட அந்தச் செயலியே முடிவு செய்யவும் வாய்ப்பிருக்கிறது. கடைசி வரைக்கும் உங்களுக்குத் தேவையான சீட்டு வரவேயில்லை என்றால் எப்படி வெற்றி பெறுவீர்கள்? இந்த ரம்மி விளையாட்டுகளில் பணம் வென்றவர்களைவிட பணத்தை இழந்தவர்களே அதிகம். இவை முற்றிலும் ஆபத்தானவை” என்றார்.

இந்தப் பொதுமுடக்கக் காலத்தில் வீட்டில் இருக்கும் மக்களின் புகலிடமாக இணையவெளிதான் இருக்கிறது. அந்த வகையில் யூடியூப் இணையதளம், அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது. இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் சில, தங்களின் விளம்பரங்களுக்கு ஆஸ்தான தளமாக யூடியூப் தளத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றன. கணிசமான தொகையைக் கொடுத்து, யூடியூப் பிரபலங்களையே தங்கள் ரம்மி செயலிக்கு விளம்பரத் தூதர்களாக மாற்றிப் பேசவும் வைக்கின்றன. இதில் வேதனையளிக்கும் விஷயம் என்னவென்றால் சமூக முற்போக்கு பேசும் யூடியூப் சேனல்களே இந்தச் செயலுக்குத் துணை போவதுதான்.

இது தொடர்பாக ‘யூடர்ன்’ என்ற யூடியூப் சேனல் மற்றும் இணையதளத்தை நடத்திவரும் பத்திரிகையாளர் ஐயன் கார்த்திகேயனிடம் பேசினோம். ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு எதிராகத் தொடர்ந்து பேசிவரும் இவர் இதுகுறித்துக் கூறுகையில், “ரம்மி நிறுவனங்கள் கொடுக்கும் பெரும் தொகைக்காகத்தான் சில யூடியூப் சேனல்கள் இதைச் செய்ய முன்வருகின்றன. ஒரு யூடியூப் சேனல் வழக்கமாக விளம்பரத்திற்கு ரூ.10,000 வாங்குகிறது என்றால், ரம்மி நிறுவனங்கள் ரூ.15,000 தரத் தயாராக இருக்கின்றன.

வினோத், ஐயன் கார்த்திகேயன்

பொதுமுடக்கக் காலத்தில் வேறு நிறுவனங்களின் விளம்பரங்கள் கிடைப்பது அரிதாகிவிட்டதும் கவனிக்கத்தக்கது. இந்த விளம்பரங்களில் அவர்கள் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறுகின்றனர். சூதாடுவது எப்படிச் சம்பாதிப்பதாக ஆகும்? உழைப்பின் மூலம் பெறுவதே சம்பாதிப்பது. உழைத்தால் சம்பாத்தியம் என்பது நிச்சயம். ஆனால், சூதாட்டத்தில் அது நிச்சயமல்ல, மொத்த பணத்தையும் இழக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

உண்மையில் இது பெரும் சூழ்ச்சி. இந்த ரம்மி செயலிகள் நேர்மையாகச் செயலாற்றுகிறதா என்பதைக் கண்காணிக்க ‘ஆன்லைன் ரம்மி ஃபெடரேஷன்’ என்ற தனியார் அமைப்பு இருக்கிறது. ஆனால், அதில் முக்கியப் பங்காளர்களாக முன்னணியில் இருக்கும் ரம்மி நிறுவனங்களே இயங்கிவருகின்றன. பிறகு எப்படி அந்த அமைப்பின் நேர்மையை நம்ப முடியும்?” என்றார்.

இந்த ரம்மி செயலிகளின் விளம்பரங்களில் பெரும்பாலும் பிரபலமான நடிகை - நடிகர்களைப் பயன்படுத்தாமல் புதுமுக நடிகர்களை சாமானிய மக்களைப் போல் தத்ரூபமாக நடிக்க வைக்கிறார்கள். நாம் அனுதினமும் பார்க்கும் ஆட்டோ ஓட்டுநர், டீக்கடைக்காரர், பூ விற்கும் பெண்மணி போன்றோர் இந்த விளம்பரங்களில் தோன்றி, ‘நான் ரம்மி விளையாடி இவ்வளவு சம்பாதித்தேன்’ என்று கூறுவதுபோல் இந்த விளம்பரங்கள் உருவாக்கப்படுகின்றன. நாம் அன்றாடம் பார்க்கும், நம் சக மனிதர்கள் இவ்வளவு பணம் பெற்றுவிட்டார்களா என்று நமக்குள் எழும் சிறு பொறாமை உணர்வே நம்மைப் பலிகொண்டுவிடும்.

தர்மர் முதல் நள மகாராஜா வரை சூதாடி வாழ்க்கையை இழந்த கதைகளைக் கேட்டு வளர்ந்த ஒரு சமூகம், இப்போது ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகிக் கிடப்பது பெரும் அவலம். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இதன் மூலமும் பல குடும்பங்கள் தெருவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது.

- க.விக்னேஷ்வரன்

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x