யூடியூப்புக்கு போட்டியாக களமிறங்கும்  ஃபேஸ்புக்

யூடியூப்புக்கு போட்டியாக களமிறங்கும்  ஃபேஸ்புக்
Updated on
1 min read

கூகுள் நிறுவனத்துக்குச் சொந்தமான யூடியூப்புக்குப் போட்டியாக, அதிகாரபூர்வ உரிமம் பெற்ற பாடல் வீடியோக்களுக்கான வசதியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ளது.

அமெரிக்காவில் அடுத்த மாதம் முதல் இந்த வசதி செயல்படவுள்ளது. பிரபல இசைக் கலைஞர்களின் பக்கங்களுக்கு ஃபேஸ்புக் தரப்பு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது. இதில் ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு முன், அவரவர் பக்கங்களில் ஒரு புதிய செட்டிங்கை இயக்க வேண்டும்.

இதன் மூலம் தானாகவே அவர்களின் பாடல் வீடியோக்கள் புதிய சேவைக்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைச் செய்வதன் மூலம், அவர்களின் பக்கத்தில் பாடல் வீடியோவைச் சேர்ப்பதற்கான அனுமதியை அந்தக் கலைஞர்கள் வழங்குவதாக எடுத்துக் கொள்ளப்படும்.

இதைச் செய்யாவிட்டாலும் கூட, அந்தந்த இசைக் கலைஞரின் பெயரில், அவரது அதிகாரபூர்வ இசைக்கான பக்கங்களை ஃபேஸ்புக் தானாக உருவாக்கும். தங்கள் வீடியோவையோ, மற்ற இணைப்புகளையோ இசைக் கலைஞர்கள் பதிவேற்ற வேண்டிய அவசியம் இருக்காது. சேர்க்கப்பட்ட பாடல் வீடியோவின் விவரங்களைப் பின்னர் கூட இசைக் கலைஞர்கள் மாற்றிக் கொள்ளலாம்.

இந்தப் பக்கத்தை ஃபேஸ்புக் தரப்பே கட்டுப்படுத்தும். ஃபேஸ்புக்கில் வாட்ச் பக்கம் மூலமாகவும், புதிய இசைக்கான பக்கத்திலும் இந்தப் பக்கத்தைப் பயனர்கள் பார்க்கலாம். இது குறித்து ஃபேஸ்புக் தரப்பிலிருந்து இதுவரை ஊடகங்களுக்கு அறிக்கை எதுவும் வரவில்லை.

ஃபேஸ்புக்கின் இந்த முயற்சி யூடியூப்புக்குப் போட்டியாகவே பார்க்கப்படுகிறது. யூடியூப்பில் 200 கோடி பயனர்களுக்கு மேல் உள்ளனர். 2019-ம் ஆண்டில் மட்டும், இசைத் துறைக்கு, யூடியூப்பிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் கிடைத்துள்ளது.

கூகுளின் விளம்பரமில்லாக் கட்டணச் சேவையில் 2 கோடி சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். யூடியூப்பின் கட்டணத் தொலைக்காட்சி சேவையில் 20 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். இன்னொரு பக்கம் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சர்வதேச அளவில் 260 கோடிக்கும் அதிகமாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in