

அலுவலகம் திரும்புவது இந்த ஆண்டில் சாத்தியமில்லை என்று ஆப்பிள் நிறுவனம் தனது ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், அமெரிக்கா மற்றும் உலகின் சில பகுதிகளில் உள்ள தனது அலுவலகங்களை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கிடையில் ஊழியர்களின் வீடுகளுக்கு கோவிட்-19 பரிசோதனை உபகரணங்களை ஆப்பிள் நிறுவனம் அனுப்பி வருகிறது.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் (மக்கள் மற்றும் வணிகம்) டெயிட்ரி ஓ பிரையன், வீடியோ மூலம் தனது ஊழியர்களிடையே சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதில், ''வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் உணர்ந்திருப்போம்.
ஆன்லைன் மற்றும் தொலைபேசி வழியாக வாடிக்கையாளர்களின் தேவைகளை நாம் நிறைவேற்ற வேண்டும். இப்போது நமது நுகர்வோர்கள் தங்கள் கேட்ஜெட்டுகளுக்கான அவசியத்தை உணர்ந்திருப்பர்.
எனினும் 2020-ம் ஆண்டு கடைசி வரை நம்மால் முழுமையாக அலுவலகம் சென்று பணியாற்ற முடியாது. இந்த நேரத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களைத் திருப்திப்படுத்துவது அவசியம்'' என்று பிரையன் தெரிவித்துள்ளார்.