ஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட் அறிமுகம்; ரிலையன்ஸ் அதிரடி

ஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட் அறிமுகம்; ரிலையன்ஸ் அதிரடி
Updated on
1 min read

ஜூம் செயலிக்குப் போட்டியாக இலவச, காலவரம்பற்ற வீடியோ கான்ஃப்ரன்சிங் காரணத்துக்காக ஜியோமீட் என்னும் செயலியை ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடியாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஜியோமீட் செயலி, ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ், விண்டோஸ், மேக்ஓஎஸ் என அனைத்துத் தளங்களிலும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி மூலம் அதிகபட்சமாக 100 பயனர்கள், காணாலி மூலம் இலவசமாக கான்ஃப்ரன்சில் பேசமுடியும். ஆடியோ, வீடியோ இரண்டும் எச்டி தரத்தில் இருக்கும்.

ஜூம் செயலியைப் போல 40 நிமிட நேரக் கட்டுப்பாடு எதுவுமில்லாமல் பாதுகாப்பான முறையில் அதிகபட்சமாக 24 மணி நேரம்வரை ஜியோமீட் மூலம் பேசமுடியும். ஒரு பயனர், ஒரு நாளைக்கு எத்தனை கருத்தரங்குகளை வேண்டுமானாலும் உருவாக்கி, பேச, பார்க்க முடியும். தேவைப்பட்டால் ’வெயிட்டிங் ரூம்’ என்னும் தெரிவு மூலம் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் நபர்கள், அனுமதியில்லாமல் உள்நுழைவதைத் தடுக்கும் வசதியும் இதில் உண்டு.

மொபைல் எண் அல்லது இ-மெயில் ஐடி மூலம் எளிதாக செயலிக்குள் நுழைந்து கருத்தரங்கை உருவாக்க முடியும். ஜியோமீட் செயலியில் உள்ள 'சேஃப் டிரைவிங் மோட்' தெரிவின் மூலம் வண்டி ஓட்டும்போது பேசும் வசதியும் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 5 சாதனங்களில் உள்நுழையும் வசதியும் இதில் செய்யப்பட்டுள்ள்ளது.

ஜூம் செயலியில் 40 நிமிடங்களுக்கும் மேலான கருத்தரங்கம் என்னும்போது மாதாமாதம் 15 டாலர்கள் (ஆண்டுக்கு 180 டாலர்கள்) செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் ஜியோமீட் செயலி மூலம் ஆண்டுக்கு ஒவ்வொருவருக்கும் சுமார் ரூ.13,500 மிச்சமாகும் என்று ரிலையன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in