Last Updated : 01 Jul, 2020 05:33 PM

 

Published : 01 Jul 2020 05:33 PM
Last Updated : 01 Jul 2020 05:33 PM

பேடிஎம் இந்தியாவா, சீனாவா? - ட்விட்டரில் எழுச்சி கண்ட இன்னொரு ட்ரெண்ட்

பேடிஎம் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனம்தான் என்று ட்விட்டரில் பல பயனர்களும், முதலீட்டாளர்களும் அந்நிறுவனத்துக்கு ஆதரவுக் குரல் கொடுத்துள்ளனர்.

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன எல்லையில் பதற்றம் ஆரம்பித்ததிலிருந்தே சீனப் பொருட்கள், நிறுவனங்களுக்கு எதிரான குரல் இந்தியாவில் ஒலிக்க ஆரம்பித்தது. குறிப்பாக இணையத்தில் இது தொடர்பான ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தது.

தொடர்ந்து மத்திய அரசு டிக்டாக், வீ சாட் உட்பட 59 சீன செயலிகளுக்குத் தடை விதித்தபின், சீன நிறுவனமான அலிபாபாவின் மறைமுக முதலீடு இருக்கும் பேடிஎம் நிறுவனத்தை ஏன் மத்திய அரசு தடை செய்யவில்லை என்று கேள்விகள் எழ ஆரம்பித்தன. பேடிஎம் சேவைக்கு எதிரான ட்வீட்டுகளும் பலரால் பகிரப்பட்டன. நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பேடிஎம், கடந்த சில வாரங்களாகவே இந்த எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறது.

சீனாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் துணை நிறுவனமான ஆண்ட் ஃபினான்ஷியல் என்ற நிறுவனம் பேடிஎம் நிறுவனத்தின் முதலீட்டாளர்களில் ஒன்றாக இருப்பதே இந்த எதிர்ப்பு எழக் காரணம். ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்லும் வகையில், பேடிஎம் இந்தியாவில் செயல்படும், இந்திய நிறுவனம்தான் என ஒரு சிலர் ஆதரவுக்கரம் நீட்ட ஆரம்பித்தனர்.

"பேடிஎம் ஒரு இந்திய நிறுவனம். ஊரடங்கிலும் தினசரி லட்சக்கணக்கான தினக்கூலிப் பணியாளர்களுக்கு வேலை தருகிறது. யாருமே அதைப் பற்றிப் பேசவில்லையே" என்றார் ஒரு பயனர்.

தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர், பேடிஎம் நிறுவனத்தில் பெருமளவு சீன முதலீடுகள் இருப்பதாகக் கூறிய புகாருக்கும் சிலர் நேரடியாகப் பதிலளிக்க ஆரம்பித்தனர்.

ஒரு நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பதற்கும், ஒரு நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது என்பதற்கும் வித்தியாசங்கள் உள்ளன என்று சிலர் அவரைக் குறிப்பிட்டுப் பகிர்ந்தனர்.

மேலும் முதலீட்டாளர் ஒருவர், "பேடிஎம், ஸொமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் எல்லாம் இந்திய நிறுவனங்களே. அவை இந்தியாவின் சட்டங்களைத்தான் பின்பற்ற வேண்டும். அப்படிப் பார்த்தால் ஐசிஐசிஐ வங்கியில் 40 சதவீதத்துக்கும் மேல் அந்நிய முதலீடு உள்ளது. அந்தக் கணக்குகள் எந்த நாட்டில் உள்ளன என்பது யாருக்கும் தெரியாது. ஆனாலும் அது இந்திய வங்கிதான். ரிசர்வ் வங்கி இதை இழுத்து மூடிவிட்டு அதன் தலைமைச் செயல் அதிகாரியை கைது செய்யலாம் இல்லையா" என்று பகிர்ந்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x