

சமூக நோக்கில் பயன்படுத்தும்போது தொழில்நுட்பத்தின் இன்னொரு பரிமாணத்தைத் தெரிந்துகொள்ள முடியும். குரோம் பிரவுசருக்கான மனிதநேய நீட்டிப்பு சேவை அறிமுகம் இதற்குச் சிறந்த உதாரணம். இந்தச் சேவை அகதிகள் தொடர்பான செய்திகளில் மனிதநேயமில்லாத பதங்களை மாற்றியமைக்கிறது.
இணையப் பக்கங்களை அணுகுவதற்கான மென்பொருள்கள் பிரவுசர்கள். அவை இணையதளங்களை அவற்றுக்குரிய வடிவில் தோன்றச்செய்கின்றன. பிரவுசர்கள் மூலமே சின்னச் சின்ன இணையத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம். இதற்கு பிரவுசர் நீட்டிப்புச் சேவைகள் கைகொடுக்கின்றன. தெரியாத வார்த்தைகளுக்குப் பொருள் தேட உதவுகின்றன, புதிய இணையப் பக்கத்தைத் திறக்க முயலும்போதும் அன்றைய தினம் செய்ய வேண்டிய செயலை நினைவூட்டுகின்றன. இப்படிப் பல பயன்பாடுகள் உள்ளன.
இந்த வரிசையில் மனிதநேய நோக்குடன் ரீஹியூமனைஸ் எனும் நீட்டிப்புச் சேவை அறிமுகமாகி இருக்கிறது. ஐரோப்பாவை உலுக்கிவரும் அகதிகள் நெருக்கடி தொடர்பான செய்திகளில் உள்ள மனிதநேயமற்ற பதங்களை இந்த நீட்டிப்புச் சேவை மாற்றி அமைக்கிறது.
உள்நாட்டுப் போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சிரியா நாட்டிலிருந்து வெளியேறும் மக்கள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் பெற முயன்றுவருகின்றனர். எந்த நாட்டில் தங்களுக்கு அடைக்கலம் கிடைக்கும் எனத் தவித்துக்கொண்டிருக்கும் இந்த மக்களின் பரிதவிப்பு உலகின் மனசாட்சியை உலுக்கியிருக்கிறது. அடைக்கலம் கேட்டு வரும் ஆதரவற்றவர்களுக்கு நேசக்கரம் நீட்ட வேண்டும் என்று ஐரோப்பிய மக்கள் பெரும்பாலானோர் தங்கள் நாட்டு அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர். எனினும் இந்த நெருக்கடியை அனுமதி பெறாத குடியேற்றச் சிக்கலாக மட்டுமே பார்ப்பவர்களும் இருக்கின்றனர்.
இந்நிலையில் பத்திரிகை மற்றும் நாளிதழ்கள் அடைக்கலம் கேட்டு வருபவர்களைச் சுட்டிக்காட்ட அகதிகள் என்ற பதத்தைப் பயன்படுத்துகின்றன. மேலும் படகு மக்கள், குடியேறிகள், வரிசையில் முந்துபவர்கள் உள்ளிட்ட வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை மனிதநேய நோக்கில் அமையவில்லை என்று கருத்தும் வலுவாக முன்வைக்கப்படுகிறது. அடைக்கலம் நாடி வருபவர்களை அகதிகளாகவோ குடியேறிகளாகவோ பார்க்காமல் மனிதர்களாகப் பார்ப்பதே அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது.
இந்தக் கருத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு உதவும் வகையில் குரோம் பிரவுசருக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரீஹியூமனைஸ் செயலி பெரும் ஆசுவாசத்தை அளிக்கிறது. இந்த நீட்டிப்புச் சேவையை இணையவாசிகள் தங்கள் பிரவுசரில் நிறுவிக்கொண்டால், அகதிகள் நெருக்கடி தொடர்பான செய்திகளை வாசிக்கும்போது அந்தச் செய்திகளில் இந்த மக்களைக் குறிக்க மனிதநேயமில்லாச் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அவை நீக்கப்பட்டு மனிதர்கள் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் செய்திகளை மனிதநேயக் கண்ணோட்டத்தில் வாசிக்க இந்த நீட்டிப்புச் சேவை உதவுகிறது. மனிதநேயத்துக்கான குரோம் நீட்டிப்புச் சேவை எனும் வாசகத்துடன் அறிமுகமாகியுள்ள இந்தச் சேவையை ஏஜென்சி எனும் சமூக நோக்கிலான கிரியேட்டிவ் ஸ்டூடியோ உருவாக்கியுள்ளது. சிறிய முயற்சியான இந்தச் சேவை மனிதகுல நெருக்கடியை மனிதநேய நோக்கிலேயே அணுக வலியுறுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு: >http://rehumanize.me/