

24 மணி நேரங்களில் தானாகவே மறையக்கூடிய வகையில் ட்வீட் செய்யும் வசதியை ட்விட்டர் தரப்பு இந்தியாவில் பரிசோதனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஃப்ளீட்ஸ் ஃபீச்சர் (Fleets feature) என்று அழைக்கப்படும் இந்த வசதியைத் தேர்வு செய்யும்போது, பயனர்கள் ஒரு ட்வீட்டைப் பகிர்ந்த 24 மணி நேரத்துக்குப் பின் அது தானாக மறையும். மேலும் அதன் ரீட்வீட், பின்னூட்டங்கள், லைக் என அனைத்தும் மறையும். ஸ்னாப்சாட் செயலியின் ஸ்டோரீஸ் வசதியைப் பார்த்து இது வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது பிரேசில் மட்டும் இத்தாலி ஆகிய நாடுகளில் இந்த வசதி பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் வரும் நாட்களில், ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் ட்விட்டர் செயலியை அப்டேட் செய்து இந்த வசதியைப் பெறலாம் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.
"இந்தியாவுக்கு ஃப்ளீட்ஸ் வசதியைக் கொண்டு வருவதில் ஆர்வமாக இருக்கிறோம். இதன் மூலம் இந்தப் புதிய வசதியைப் பரிசோதிக்கும் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக மாறியுள்ளது. இந்தியாவில் பரிசோதனை செய்வதன் மூலம் உரையாடலில் புதிய வசதியால் இந்தியர்கள் ட்விட்டர் பயன்படுத்தும் முறையில் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதை அறிய முடியும்" என்று ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மனீஷ் மஹேஷ்வரி கூறியுள்ளார்.
செயலியில் நமது ப்ரொஃபைல் படத்தை க்ளிக் செய்வதன் மூலம் புதிய ஃப்ளீட் ட்வீட்டை உருவாக்க முடியும். நமது ஃப்ளீட்டை யார் பார்த்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க முடியும். அவர்களது புகைப்படத்தை க்ளிக் செய்வதன் மூலம் அவர்கள் என்ன பகிர்ந்துள்ளனர் என்பதையும் பார்க்க முடியும். இல்லையென்றால் ஒருவரது ப்ரொஃபைல் பக்கத்துக்குச் சென்றும் அவர்களது ஃப்ளீட்ஸை பார்க்கலாம்.
ஃப்ளீட்டுக்கு அதே இடத்திலேயோ அல்லது தனிப்பட்ட செய்தியாகவோ கூட பதில் போட முடியும். இந்தச் செயல்பாடு ஃபேஸ்புக் ஸ்டோரீஸ் வசதியைப் போலவே அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எழுத்து, வீடியோ, ஜிஃப், புகைப்படம் என எதை ட்வீட் செய்யும் போதும் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.