

5ஜி நெட்வொர்க் மூலம் கரோனா பரவுகிறது போன்ற தவறான தகவல்களை சில பயனர்கள் பகிர்ந்ததையடுத்து, இதுபோன்ற தவறான, மோசமான நடவடிக்கைகளைத் தூண்டும் தகவல்களை நீக்க ட்விட்டர் முடிவு செய்துள்ளது.
நம்பத்தகுந்த தகவல்களை மக்களுக்குத் தந்து, மற்றவர்களுடன் உரையாடி, கரோனா நெருக்கடியில் என்ன நடக்கிறது என்பது நிகழ் நேரத்தில் சரியாகத் தெரிந்துகொள்ள ட்விட்டர் எடுக்கும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
கோவிட்-19 தொற்றுக்கு முன்பாகவே 5ஜி ஒரு சதி என்கிற ரீதியில் கட்டுக்கதைகள் உலா வரத் தொடங்கிவிட்டன. இருந்தாலும், நோய்த் தொற்றினால் இதுபோன்ற கற்பனைகள் இன்னும் வளர்ந்துள்ளன. இதில் சில செய்திகளில், இந்த நோய்க்கு 5ஜி தான் காரணம் என்கிற ரீதியில் பழி போடப்பட்டுள்ளது.
முன்னதாக 5ஜி-யினால்தான் கரோனா பரவுகிறது. உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் மொபைல் டவர்களை அழித்துவிடுங்கள் எனச் சில தகவல்கள் பகிரப்பட்டன. ஐரோப்பிய நாடுகளில் இதை நம்பி சிலர் அப்படி மொபைல் டவர்களைச் சேதப்படுத்தியுள்ளதாக டெக் க்ரன்ச் என்ற இணையதளம் செய்தி வெளியிட்டது.
எனவே, இதுபோல சரிபார்க்கப்படாத, மக்களைத் தவறான நடவடிக்கைகளுக்கு வழிநடத்தும், 5ஜி தொடர்பான கட்டமைப்பைச் சேதப்படுத்தச் சொல்லும் செய்திகளை, தேவையில்லாத பயம், பதற்றம், சமூக அமைதியின்மையை விளைவிக்கும் செய்திகளை நீக்க முடிவெடுத்துள்ளதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.