

தேர்தல் நேரத்தில் வரும் செய்திகள் வெளிப்படையானதாக இருக்க, ஃபேஸ்புக்கில் அதிக வீச்சு இருக்கும் பிரபலமான பக்கங்கள் எந்த இடத்திலிருந்து இயக்கப்படுகின்றன என்பதைப் பயனர்களுக்கு வெளிப்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் இன்ஸ்டாகிராமிலும் பிரபலமான பக்கங்களின் ஒவ்வொரு பதிவைப் பற்றியும் இப்படி வெளிப்படுத்தவுள்ளது.
இதன் மூலம் பயனர்கள், எங்கிருந்து அந்தத் தகவல் பகிரப்படுகிறது, அதன் நம்பகத்தன்மை என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். முதலில் இந்த வசதி அமெரிக்காவில் பேஸ்புக் பக்கங்களுக்கும், இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கும் அறிமுகமாகிறது.
"தேர்தல் முறையைப் பாதுகாக்கவும், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் நாங்கள் முன்னெடுத்திருக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியே இவை. இதன் மூலம் பயனர்கள், அவர்கள் படிக்கும், நம்பும், பகிரும் பதிவுகள் பற்றி ஒழுங்கான பின்புலத்தை அறிந்து கொள்ளலாம்.
எங்கள் சேவைகளை மக்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்த வேண்டும், , அவர்கள் பார்க்கும் பதிவுகளுக்குப் பின் யார் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம். அதுவும் தேர்தல் என்று வரும்போது இவை அதிக முக்கியத்துவம் பெறுகிறது" என்று ஃபேஸ்புக் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டிலிருந்து, பக்கங்கள் (Pages) பற்றிய கூடுதல் விவரங்களை ஃபேஸ்புக் கொடுக்க ஆரம்பித்தது. அந்த பக்கத்தை யார் நிர்வகிக்கிறார், அவர் எந்த இடத்தில் இருக்கிறார் உள்ளிட்ட விவரங்களை அறிய முடியும். மேலும் இன்ஸ்டாகிராமின் ஒரு கணக்கில், அந்த நபரைப் பற்றிய கூடுதல் விவரங்களையும் கொடுக்க ஆரம்பித்தது. இதன் மூலம் அந்த கணக்கின் நம்பகத்தன்மையைப் பயனர்கள் எடை போட்டுக்கொள்ளலாம்.