கரோனா தொடர்பாக ஒவ்வொரு நாளும் 1.8 கோடி போலி மின்னஞ்சல்கள்: கூகுள் தகவல்

கரோனா தொடர்பாக ஒவ்வொரு நாளும் 1.8 கோடி போலி மின்னஞ்சல்கள்: கூகுள் தகவல்
Updated on
1 min read

கரோனா தொடர்பான செய்தி என ஒரு நாளைக்கு 1.8 கோடி போலி மின்னஞ்சல்கள் உலவுவதாக கூகுள் தெரிவித்துள்ளது.

மின்னஞ்சல்கள் மூலம் மக்களை ஏமாற்றும், அவர்கள் தனிப்பட்ட தகவல்களை, விவரங்களைத் திருடும் வழிமுறைகளே மால்வேர் (malware) மற்றும் ஃபிஷிங் (phishing) ஆகியவை. இப்படியான போலி மின்னஞ்சல்களின் எண்ணிக்கை தற்போதைய கரோனா தொற்று சூழலில் அதிகமாகியுள்ளது.

வீட்டிலிருந்தே வேலை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், கரோனா பற்றிய செய்தி என போலியான மின்னஞ்சல்கள் மூலம் அவர்கள் குறிவைக்கப்படுகின்றனர். இதோடு கரோனா தொடர்பாக 24 கோடிக்கும் அதிகமான ஸ்பாம் மின்னஞ்சல்களும் தினமும் உருவாவதாக கூகுள் தெரிவித்துள்ளது.

இதில் 99.9 சதவீத போலி மின்னஞ்சல்களை தாங்கள் தொடர்ந்து முடக்கி வருவதாகக் கூறியிருக்கும் கூகுள், தங்களிடம் இருக்கும் செயற்கை நுண்ணறிவு, இந்தப் போலிகளின் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அவற்றை வடிகட்டுவதாகக் கூறியுள்ளது.

இந்த மின்னஞ்சல்களில் பிரதானமான விஷயங்கள் இரண்டு. ஒன்று கரோனா பற்றிய பீதி அல்லது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை. இதன் மூலம் பயனர்களைப் பதில் சொல்ல வைக்கத் தூண்டுகின்றன. அல்லது உலக சுகாதார அமைப்பு போல தங்களைக் காட்டிக்கொண்டு சில விஷமிகள் மின்னஞ்சல்கள் அனுப்புகின்றனர். இதை வைத்து பண மோசடி அல்லது கணினியில் மால்வேரைப் பரப்புவது என பயனர்களை ஏமாற்றுகின்றனர்.

இதனால் உலக சுகாதார மையத்தோடு சேர்ந்து பணியாற்றும் கூகுள், பாதுகாப்பை அதிகரிக்க மின்னஞ்சல் அங்கீகாரத்துக்கான முக்கியத்துவத்தை மையத்துக்கு எடுத்துரைத்துள்ளது. இப்படி அங்கீகரிக்கப்படும்போது உலக சுகாதார மையத்திடமிருந்து அனுப்பப்படும் மின்னஞ்சல் போல விஷமிகளால் அனுப்ப முடியாது. அப்படி உருவாகும் மின்னஞ்சல்கள் பயனர்களின் இன்பாக்ஸுக்குச் செல்லாது.

இதுபோன்ற அச்சுறுத்தல்கள் ஏற்கெனவே இருப்பவை தானென்றும், இருக்கும் விஷயங்களில் கோவிட்-19 பற்றி மாற்றி அனுப்பி தங்கள் ஏமாற்று வேலைகளை விஷமிகள் தொடருவதாகவும் கூகுள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பயனர்கள் தங்களுக்குத் தெரியாத முகவரியிலிருந்து வரும் மின்னஞ்சல்களில் இருக்கும் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்யாமல் இருக்க வேண்டும் என்றும், ஒரு லின்க்கை க்ளிக் செய்து பார்க்கும் முன் அது உண்மையான லின்க் தானா என்பதையும் பயனர்கள் சரிபார்க்க வேண்டும் என்றும் கூகுள் அறிவுறுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in