

இணையத்தில் பார்க்கக்கூடிய பெரும்பாலான வீடியோக்கள் குவிக் பைட் ரகம்தான். அதாவது நிமிடக் கணக்கில் ஓடக்கூடியவை. யூடியூப்பை எடுத்துக்கொண்டால் அதன் வீடீயோக்களின் சராசரி நேரம் 3 முதல் 5 நிமிடங்களே. அதிகபட்சம் போனால் பத்து நிமிடங்களில் அநேக வீடியோக்களைப் பார்த்து ரசித்துவிடலாம். சில நேரங்களில் வீடியோக்களைப் பகிரும்போது, முழு வீடியோவையும் பார்க்கச் சொல்வதைவிட, அதில் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் அடையாளம் காட்டினால் போதும் என்று தோன்றும். இது போன்ற நேரங்களில் கைகொடுக்கிறது வைப்பி இணையதளம் .
வைப்பி தளத்தில் ஒரு வீடியோவின் குறிப்பிட்ட பகுதியைச் சுட்டிக்காட்டி, அதை மட்டும் பகிர்ந்துகொள்ளலாம். அதனுடன் கருத்து தெரிவிக்கும் வசதியும் இருப்பதால், வீடியோவைப் பார்த்து ரசிப்பவர்கள் உரையாடலிலும் ஈடுபடலாம். வீடியோவுடன் இணைக்கப்பட்ட சின்னப் பெட்டியில் டைப் செய்து கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
வைப்பி தளத்தில், நீங்கள் விரும்பும் வீடியோவின் இணைய முகவரியை டைப் செய்து அதன் குறிப்பிட்ட பகுதியை அடையாளம் காட்டிப் பகிர்ந்துகொள்ளலாம்.
பல விதங்களில் இந்த வீடியோ மெருகூட்டல் சேவையைப் பயன்படுத்தலாம். ஆசிரியர்கள் , கல்வி சார்ந்த வீடியோக்களைப் பகிர்ந்துகொண்டு மாணவர் களுடன் உரையாடலாம்.
வைப்பி தளத்தில் இவ்வாறு ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள வீடியோக்களையும் பார்க்கலாம். இத்தகையை வீடியோக்களை இமெயிலில் அனுப்பிவைக்கவும் கோரலாம்.
இணையதள முகவரி:> https://www.vibby.com/