

பிரபலமான, அதேசமயம் சர்ச்சைக்குரிய வீடியோ பகிர்வுத் தளமான டிக் டாக், இந்தியா கோவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையிலும் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
தேசிய ஊரடங்குக்குப் பின், தெருவில் வசிக்கும் சிறுவர்கள், மன அழுத்தத்தைப் போக்க டிக் டாக் செயலியைப் பயன்படுத்தினார்கள் என்ற செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள் என்றால், கோவிட்-19 தொற்றுக்கு எதிராக முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டாம் என்று முஸ்லிம்களுக்குச் சொல்லப்பட்ட தவறான தகவல்கள் பற்றிய வீடியோ டிக் டாக்கில் உலா வந்ததைப் பற்றியும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். டிக் டாக்கில் உருவாக்கப்படும் வீடியோக்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் எனப் பரவுவதும் வாடிக்கையே.
இன்னொரு பக்கம் இஸ்லாமிய சமுதாயத்துக்கு எதிரான வெறுப்பைக் கக்கும் வீடியோக்களும் பதிவேற்றப்பட்டன. இப்படி சமூக ஊடகத்தில் வெறுப்பைப் பரப்புவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது.
அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ்-இ-முஷவரத்தின் தலைவர் நவாய்த் ஹமீத், தேசத்தில் முஸ்லிம்கள்தான் கோவிட்-19 தொற்றைப் பரப்புகிறார்கள் என்று சொல்லும் 30,000 போலி வீடியோக்கள் டிக் டாக்கில் உலவுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மாதிரியான வீடியோக்கள் சமூகங்களுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்ட இந்திய அரசாங்கம், டிக் டாக் உள்ளிட்ட தளங்களுக்கு கடிதம் எழுதி, இது போன்ற வீடியோக்களை நீக்கச் சொன்னது. டிக் டாக் தங்களால் முயன்றதைச் செய்து வருவதாகக் கூறியுள்ளது.
"தற்போதைய சூழலில், சரிபார்க்கப்படாத, தவறாக வழிநடத்தும் வீடியோக்கள் கவலை தருகின்றன. இவை சமூக ஊடகங்களில் அதிகம் கவனம் பெற வேண்டிய பிரச்சினை. டிக் டாக்கில் நாங்கள் கண்காணிப்பை அதிகரித்துள்ளோம். எங்களது விதிமுறைகளை மீறும் வீடியோக்களைக் கண்காணித்து முறையாக நீக்கி வருகிறோம். இந்தியாவில் கோவிட்-19 தொடர்பான தவறான தகவல்களைத் தரும், பொதுச் சுகாதாரத்துக்குக் கேடு விளைவிக்கும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்களை நீக்கியுள்ளோம்.
கடந்த சில வாரங்களாக எங்கள் தளத்தில் ஒழுங்கான தகவல் தெரிவிக்கும் வீடியோக்களுக்கு முக்கியத்துவம் தந்துள்ளோம். சில அரசாங்க அமைப்புகளுக்கும், சட்டப் பிரிவுகளுடனும் சேர்ந்து பணியாற்றியுள்ளோம். சில தன்னார்வ அமைப்புகளுடனும் சேர்ந்து, பொறுப்பான பழக்க வழக்கங்கள் குறித்த வீடியோக்களைப் பொழுதுபோக்காகவும், பொறுப்பான முறையிலும் தந்து வருகிறோம்" என்று டிக் டாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு, டெல்லி, உத்தரகாண்ட், கேரளா, பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறை பிரிவு, கோவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த டிக் டாக்கைப் பயன்படுத்தி வருகிறது. உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சில சர்வதேச அமைப்புகளும், டிக் டாக்கை விழிப்புணர்வுக்காகப் பயன்படுத்தி வருகின்றன.
பீஜிங்கைச் சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக் டாக், கடந்த வாரம் இந்தியாவில் ரூ.100 கோடி மதிப்பில் நான்கு லட்சம் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களையும், மருத்துவர்களுக்கான இரண்டு லட்சம் முகக் கவசங்களையும் அளித்துள்ளதாகக் கூறியுள்ளது.