Last Updated : 03 Apr, 2020 01:20 PM

 

Published : 03 Apr 2020 01:20 PM
Last Updated : 03 Apr 2020 01:20 PM

டிக் டாக்குக்குப் போட்டியாக கூகுள் 'ஷார்ட்ஸ்'?

டிக் டாக் செயலிக்குப் போட்டியாக கூகுள் நிறுவனம் புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளது.

பிரபலமான பாடல்கள், வசனங்கள் ஆகியவற்றுக்குப் பயனர்கள் வாயசைத்து, பாடி, நடனமாடி, சேட்டைகள் செய்வது டிக் டாக் தளத்தில் பிரபலம். மேலும் இதை மெருகேற்ற, கூடுதலான எஃபெக்ட்டுகளைச் சேர்க்கவும் வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும். சீனாவின் பைட் டான்ஸ் என்ற நிறுவனமே டிக் டாக்கை உருவாக்கியது.

இதுவரை பல நிறுவனங்கள் டிக் டாக்குக்குப் போட்டியாகச் செயலிகள் கொண்டு வர முயன்று வெற்றி பெற முடியவில்லை. ஃபேஸ்புக் நிறுவனம் லாஸோ என்ற செயலியைக் கொண்டு வந்தது. ஆனால், அது பற்றி பலருக்கும் இன்னமும் தெரியவில்லை.

டிக் டாக்கின் சில அம்சங்களை இன்ஸ்டாகிராமும், ஸ்னாப்சாட்டும் கொண்டு வர முயன்றன. வைன் என்ற பிரபல செயலியை உருவாக்கியவர்களில் ஒருவர், பைட் என்ற செயலியை உருவாக்கி அறிமுகம் செய்தார். ஆனால், அது இன்னமும் பரவலாகவில்லை.

இந்த நிலையில் கடந்த 12 மாதங்களில் மட்டும், ஆப்பிள் மற்றும் ப்ளே ஸ்டோர் உள்ளிட்ட தளங்களிலிருந்து டிக் டாக் செயலி 84.2 கோடி முறைக்கும் அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுக்க, சீனாவைத் தவிர்த்தே, தினமும் 4.1 கோடி மக்கள் டிக் டாக்கைப் பயன்படுத்துகின்றனர்.

இதற்குப் போட்டியாக ஷார்ட்ஸ் என்கிற புதிய அம்சத்தை யூடியூபில் கொண்டு வர கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. யூடியூப் மொபைல் செயலியில் இந்த ஷார்ட்ஸ் வசதி கொடுக்கப்படும். டிக் டாக் போன்ற தனி செயலியாக இருக்காது. மேலும் யூடியூபில் உரிமம் பெற்ற பாடல்கள் அதிக அளவில் இருப்பதால் அது ஷார்ட்ஸுக்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம் யூடியூபின் விளம்பர வருமானம் 15 பில்லியன் டாலர்கள். இது டிக் டாக்கின் வருமானத்தை விடப் பல மடங்கு அதிகம். எனவே டிக் டாக்குக்கு சரியான போட்டியாக ஷார்ட்ஸ் உருவாகும் என்று கருதப்படுகிறது.

இந்த வருடத்தின் கடைசியில் ஷார்ட்ஸ் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x