

ஜப்பானைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் சோவ் புஜிமோட்டோ (Sou Fujimoto) வடிவமைக்கும் கட்டிடங்கள் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கின்றன. கண்ணாடியால் ஆன வீடு, அலுமினிய பெட்டிகளைக் கொண்ட வீடு என வித்தியாசமாக வடிவமைக்கிறார்.
தற்போது பிரான்ஸில் நிக்கோலஸ் என்கிற கட்டுமான நிறுவனம் இவரது வடிவமைப்பில் வொயிட் ட்ரீ என்கிற கட்டிடத்தை கட்டி வருகிறது. தாராளமான காற்று, சூரிய வெளிச்சம் கிடைக்கும் பசுமை வீடுகள்தான் இவரது கான்செப்ட். தனது நோக்கமே எதிர்காலத்துக்கான வீடுகளை கட்டுவதுதான் என்கிறார்.
சாகச வீடியோ
மோட்டார் சைக்கிள் பந்தய வீரரான ராபி மேடிசன் பிரத்யேகமாக வடிவமைக்கபட்ட மோட்டார் சைக்கிளை தண்ணீரில் ஓட்டி சாகசம் செய்துள்ளார். தரையிலும் தண்ணீரிலும் ஒரே சமயத்தில் செல்லும் இந்த மோட்டார் பைக் மூலம் கடல் அலைக்குள்ளாக புகுந்து மோட்டார் சைக்கிள் ஓட்டியதை படம் பிடித்துள்ளனர்.
படப்பிடிப்புக்காகவே பல நாட்கள் இந்த சாகசம் நிகழ்த்தியுள்ளார். கடைசியாக 25 அடி உயரத்துக்கு அலையில் புகுந்து வருவதுதான் ஹைலைட்டான விஷயம். சென்ற வாரம் வைரலாக பரவியது இந்த வீடியோ. ஏற்கெனவே கிரீஸில் உள்ள கொரிந்த் கால்வாயை (Corinth Canal) மோட்டார் சைக்கிள் மூலம் தாண்டியும் உள்ளார்.