

டிராப் பாக்ஸ் சேவையை நீங்கள் நிச்சயம் அறிந்திருக்கலாம். கோப்புகளைச் சேமிக்கவும், பகிர்ந்துகொள்ளவும் டிராப் பாக்ஸ் கணக்கைப் பயன்படுத்தியும் வரலாம். டிராப் பாக்ஸ் போலவே கூகுள் டிரைவ் உள்ளிட்ட சேவைகள் இருப்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இப்போது டிராப் பாக்சிற்கே ஒரு டிராப் பாக்ஸ் சேவை அறிமுகமாகி இருக்கிறது தெரியுமா? பலூன்.இயோதான் அந்தச்சேவை.
பலூன்.இயோ இணையதளம் என்ன செய்கிறது என்றால் டிராப் பாக்ஸ் கணக்கு இல்லாதவர்களிடம் இருந்துகூட கோப்புகளைப் பெற்றுக்கொள்ள வழி செய்கிறது. இதற்காக பலூன்.இயோ தளத்தில் நுழைந்து ஒரு பிரத்யேக இணைய முகவரியைப் பெற்றுக்கொள்ளலாம். பின்னர் அந்த முகவரியை மற்றவர்களிடம் பகிர்ந்துகொண்டு அவர்களிடமிருந்து கோப்புகளைக் கோரலாம். கோப்புகளை அந்த முகவரியில் சமர்ப்பித்தால் போதும், அதை உருவாக்கியவர் டிராப் பாக்ஸ் கணக்குக்கு வந்து சேர்ந்துவிடும். குழுவாகச் செயல்படுவதில் தொடங்கி, திருமண நிகழ்ச்சிக்கான புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்ளச்செய்வதுவரை பல விதங்களில் இந்த பலூனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இணையதள முகவரி: >https://balloon.io/