

விண்டோஸ் 10 இயங்குதளம், அதன் பல்வேறு அம்சங்கள் ஆகியவை பற்றி இணைய உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. பரவலாக எதிர்பார்க்கப்பட்ட புதிய பிரவுசர் எட்ஜ், டிஜிட்டல் உதவியாளர் கார்ட்னா ஆகிய அம்சங்களோடு, ஸ்டார்ட் மெனு வசதி அதன் பழைய வடிவில் விண்டோஸுக்குத் திரும்பியிருப்பதும் முக்கியமாகக் குறிப்பிடப்படுகிறது.
ஸ்டார்ட் மெனு வசதி முதலில் விண்டோஸ் 95-ல் அறிமுகமானது. அதன் பிறகு அது கிட்டத்தட்ட விண்டோஸ் இயங்குதளத்தின் அடையாள அம்சமாகிவிட்டது. கோடிக்கணக்கான விண்டோஸ் பயனாளிகளைப் பொறுத்தவரை ஸ்டார்ட் மெனு விண்டோஸுக்கான நுழைவு வாயில் போன்றதுதான். பழக்கமான வீட்டில் வாசல் கதவைத் திறந்து உள்ளே செல்வது போல பயனாளிகள் விண்டோஸில் ஸ்டார்ட் மெனுவை வரவைத்துத் தாங்கள் விரும்பிய புரோகிராம்களையும், ஆவணங்களையும் எளிதாக அணுகினார்கள். பயனாளிகளுக்கு நட்பான இயங்குதளம் எனப் பாராட்டப்படும் விண்டோஸுக்கு அந்தப் பெருமையைப் பெற்றுத் தந்ததில் ஸ்டார்ட் மெனு அம்சத்துக்குக் கணிசமான பங்கு இருக்கிறது.
1993 முதல் மாறாமல் இருக்கும் இந்த அம்சத்தில் சின்னதாகப் புரட்சி செய்வதாக நினைத்து விண்டோஸ் 8-ல் மைக்ரோசாப்ட் கையை வைத்து ஸ்டார்ட் ஸ்கிரீன் வசதியைக் கொண்டு வந்தபோது பயனாளிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டது. விண்டோஸ் -8 எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் போக இதுவும் முக்கிய காரணம்.
இப்போது, விண்டோஸ் 10 வெர்ஷனில் இந்த அம்சம் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ளது.
விண்டோஸ் எவ்வளவோ மாறிவிட்டது. கையடக்க கம்ப்யூட்டர்களாக ஸ்மார்ட் போன்கள் அவதாரம் எடுத்து இணைய உலகம் ஆண்ட்ராய்டு மயமாகிக்கொண்டிருக்கிறது. அப்படி இருக்க ஒரு பழைய அம்சத்தில் கொண்டாட என்ன இருக்கிறது எனக் கேட்கலாம்.
22 ஆண்டுகள் ஆன பிறகும் ஸ்டார்ட் மெனுவை விண்டோஸில் இருந்து தூக்கி வீச முடியாமல் இருப்பது ஏன் என்றும் கேட்கலாம்.
இங்குதான் விஷயமே இருக்கிறது. ஸ்டார்ட் மெனு வெறும் ஒரு அம்சம் மட்டும் அல்ல; அது மென்பொருள் வடிவமைப்பின் முக்கியத்துவத்தை அழகாக உணர்த்தும் ஒரு அம்சம்; அதோடு பயன்பாட்டுத்தன்மை எனும் கோட்பாட்டின் அடையாளம் என்றும் சொல்லலாம்.
விண்டோஸ் மென்பொருள் வடிவமைப்பில் இது சின்ன விஷயம்தான்; ஆனால் இந்தச் சின்ன விஷயத்துக்குப் பின்னே ஒரு சுவாரஸ்யமான கதை இருப்பது தெரியுமா?
அந்தக் கதையின் நாயகன் வடிவமைப்பாளரான டேனி ஆரன். முன்னால் மைக்ரோசாப்ட் ஊழியரான இவர்தான் ஸ்டார்ட் மெனுவின் பிரம்மா. 1993-ல் இவர் மைக்ரோசாப்டில் பணிக்குச் சேர்ந்தார். பழக்கவழக்க உளவியல் வல்லுநராகப் பயிற்சி பெற்ற செழுமையான ஆரனிடம் விண்டோஸ் இயங்குதளத்தின் பயனர் இடைமுகத்தை மெருகேற்றும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அனைவரும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் விண்டோஸ் இயங்குதளத்தை அமைக்க வேண்டிய பணி இது.
ஆரன் ஏற்கனவே சிம்பன்சி குரங்குகளுக்குப் பேசும் திறன் பயிற்சியில் ஈடுபட்டவர். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக அவர் சிம்பன்சிகளுடன் தொடர்புகொள்வதற்கான சாதனம் ஒன்றை உருவாக்கினார். சிம்பன்சி களுக்கு அவரால் எதையும் கற்றுத் தர முடியவில்லை என்றாலும், இந்த, முயற்சியின் மூலம் அவர் பயன்பாட்டுத் தன்மை பற்றிய முக்கிய குறிப்புகளைத் தெரிந்துகொண்டிருந்தார்.
விண்டோஸ் இயங்குதளம் தொடர்பான பயனாளிகள் அனுபவம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது இந்தப் பாடம்தான் அவருக்குக் கைகொடுத்தது.
அவருக்குக் கீழ் பணியாற்றிய குழுவினர் விண்டோஸ் இயங்குதளத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளிடம் கொடுத்து சோதனை செய்து கொண்டிருந்தனர். அநேகமாக எல்லாப் பயனாளிகளுமே ஒரு சின்ன டாஸ்க்கைக்கூட செய்து முடிக்க முடியாமல் திணறினர். அதாவது அவர்களால் விண்டோஸில் இருந்த அம்சங்களுக்குள் எளிதாகச் சென்றடைய முடியவில்லை. இந்தத் தடுமாற்றத்தைப் பார்த்த மற்ற புரோகிராமர்கள் நொந்து போயினர். பயனாளிகள் இப்படி இருக்கிறார்களே எனக் கோபம் அடைந்தனர்.
ஆனால் ஆரன் மட்டும் பிரச்சினை பயனாளிகளிடம் அல்ல; விண்டோஸில் எனப் புரிந்துகொண்டார். அதிலும் சோதனையில் பங்கேற்ற ஒருவரிடம் பேசிப்பார்த்தபோது அவர் விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கில் பொறியாளராக இருப்பவர் எனத் தெரிந்துகொண்டார். போயிங் பொறியாளரே விண்டோஸ் உள்ளே எளிதாக உலா வர முடியாமல் தடுமாறினால் மற்றவர்கள் கதி என்ன யோசித்த ஆரன், இயங்குதளத்தில் அடிக்கடி பயன்படுத்தும் அம்சங்களை எப்படிப் பயனாளிகள் கைகளில் எளிதாகக் கிடைக்கச்செய்வது எனத் தீவிரமாக யோசித்தார். விண்டோஸில் வடிவமைப்புக் கோளாறு என உணர்ந்தவர் ஒற்றை பட்டனில் எல்லாவற்றையும் பயனாளிகளுக்குக் கிடைக்கச்செய்ய வேண்டும் என நினைத்தார்.
இந்த யோசனையின் பயனாகத்தான், ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராம்கள் அனைத்தும் விண்டோஸ் கீழே கட்டம் கட்டமாகத் தோன்றச்செய்யும் டாஸ்க் பார் வசதியை உருவாக்கினார். அதன் பிறகு எந்த புரோகிராமையும் எளிதாகச் சென்றடையும் வகையில் டாஸ்க் பார் அடியில் ஸ்டார்ட் மெனுவை வைத்தார். அவ்வளவுதான்; வடிவமைப்பு முழுமையாயிற்று. விண்டோஸின் இடது மூலையில் ஆரம்ப கட்டம் போல இருக்கும் இந்த அம்சத்தை கிளிக் செய்தால் போதும் ஏணியில் ஏறுவது போல சரசரவென்று விண்டோஸுக்குள் சென்றுவிடலாம்.
இப்படித் தான் ஸ்டார்ட் மெனு விண்டோஸில் அறிமுகமானது.
ஆரன் பின்னர் மைக்ரோசாப்டில் இருந்து விலகிச்சென்றுவிட்டார். ஆனால் இந்தச் சின்ன கண்டுபிடிப்புக்கான காப்புரிமை அவரிடம்தான் இன்னமும் இருக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு பற்றி அவர் தனது குறிப்புகளைச் சமீபத்தில் இணையத்தில் பகிர்ந்துள்ளார். பயனாளிகள் அனுபவத்தில் பாடமாக விளங்கக்கூடிய அந்தக் குறிப்பைக் காண: >https://goo.gl/7e5cHl