Last Updated : 21 Aug, 2015 04:06 PM

 

Published : 21 Aug 2015 04:06 PM
Last Updated : 21 Aug 2015 04:06 PM

சாப்ட்வேருக்கும் சார்பு உண்டு!

பெரும்பாலான நிறுவனங்களில் வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை முதல் கட்டமாக சாப்ட்வேர்தான் தேர்வு செய்கிறது. வேலைக்குப் பொருத்தமான தகுதியை உணர்த்தக்கூடிய குறிச்சொற்களை அடிப்படையாகக் கொண்டு சாப்ட்வேர்கள் விண்ணப்பங்களைத் தேர்ந்தெடுக்கின்றன. இது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். வேலைவாய்ப்பு என்றில்லை, கடனுக்கான விண்ணப்பங்களையும் சாப்ட்வேர்கள் தேர்ந்தெடுக்கின்றன. அதனால்தான் சாப்ட்வேர் அடையாளம் காணக்கூடிய குறிச்சொற்கள் விண்ணப்பத்தில் இருப்பது நல்லது.

விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பொறுப்பு சாப்ட்வேரிடம் ஒப்படைக்கப்படும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து கவலை அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

மனிதர்கள் போலவே சாப்ட்வேர்களும் தேர்வில் சார்புத் தன்மையை வெளிப்படுத்தலாம் என்பதுதான் அந்தத் தகவல்.

இந்தப் பணிக்காக உருவாக்கப்படும் சாப்ட்வேர்களுக்குத், தரவுகள் அளிக்கப்பட்டு அவற்றிலிருந்து அடிப்படையான அம்சங்களைக் கண்டறிந்து செயல்படுவதற்கான குறிப்புகள் அல்கரிதமாக வழங்கப்படும். அதே முறையில் அவையும் விண்ணப்பங்களை ஸ்கேன் செய்து தேவையானவற்றைத் தேர்ந்தெடுக்கின்றன. அடிப்படையில் மனிதர்கள் தேர்வு செய்வதைப் போலவே அல்கரிதம்களும் செயல்படுகின்றன.

ஆகவே, மனிதத் தேர்வில் சார்புகள் உண்டாக வாய்ப்பு இருப்பது போலவே சாப்ட்வேர் தேர்விலும் நிகழலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் உட்டா, அரிசோனா மற்றும் ஹாவர்போர்டு உள்ளிட்ட பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டுள்ளனர். தங்கள் ஆய்வு முடிவுகளை சமீபத்தில் சிட்னியில் நடைபெற்ற இயந்திரப் புரிதல் தொடர்பான மாநாட்டில் வெளியிட்டுள்ளனர். இந்திய அமெரிக்கரான சுரேஷ் வெங்கடசுப்பிரமணியன் எனும் பேராசிரியர் தலைமையில்தான் இந்த ஆய்வு நடைபெற்றிருக்கிறது.

இந்த ஆய்வு மூலம் சாப்ட்வேர்களின் தேர்வில் அவற்றை அறியாமல் சார்பு உண்டாக வாய்ப்பிருக்கிறதா எனக் கண்டுபிடிக்கும் சோதனை ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். வேலைவாய்ப்பு விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் அல்கரிதம்களை இந்தச் சோதனைக்கு உட்படுத்தினால் அவை தங்களை அறியாமல் விண்ணப்பதாரர்களின் இனம் அல்லது பாலினம் தொடர்பான தகவல்களை, அவை மறைந்திருந்தாலும் ஊகித்தறிய முடிந்தது என்றால் அது சார்பு நிலைக்கு வித்திடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனைக்காக உருவாக்கப்பட்டுள்ளதும் ஒரு அல்கரிதம்தான்.

சாப்ட்வேர்கள் இவ்வாறு செய்வதாகக் கூறவில்லை, ஆனால் இதற்கான வாய்ப்பு இருப்பதாகப் பேராசிரியர் சுரேஷ் வெங்கடசுப்பிரமணியன் கூறியுள்ளார். முரண் என்ன என்றால், மனிதர்கள் செயல்படும் விதத்தைப் போலி செய்யும் வகையில் சாப்ட்வேர்களை உருவாக்கும்போது, செயற்கை அறிவு நம்மைப் போலவே செயல்பட முற்படும்போது நம்மைப் போலவே சார்பு கொள்ளவும் வாய்ப்பிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

விண்ணப்பங்களை சாப்ட்வேர் மூலம் பிரிப்பதை மையமாகக் கொண்டு ஒரு தொழில் துறையே உருவாகியுள்ள நிலையில், அது செயல்படும் விதத்தில் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான தன்மை இருக்கும் என்றால் அது நியாயமாக இருக்காது என்றும் அவர் சொல்கிறார்.

ஆனால் நல்லவேளையாக, இது போன்ற சார்பு சாப்ட்வேரிடம் இருப்பது தெரியவந்தால் அதைச் சீராக்கும் தரவுகளைச் சமர்ப்பித்து சாப்ட்வேர் செயல்பாட்டைச் சரிசெய்துவிடலாம் என்றும் பேராசிரியர் தெரிவித்துள்ளார். சாப்ட்வேர் தவறு செய்தாலும் திருத்திக்கொண்டுவிடும்! மனிதர்கள்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x