Published : 11 Sep 2019 11:20 AM
Last Updated : 11 Sep 2019 11:20 AM

ஆப்பிள் டிவி+ ஸ்ட்ரீமிங் சேவை: மாதம் ரூ.99 சந்தாவில் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்ட்ரீமிங் சேவையை நவம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்தியாவில் இந்த சேவைக்கான சந்தா மாதம் ரூ.99 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமாக நீண்ட காலம் நெட் ஃபிளிக்ஸ் இருந்து வந்தது. சமீபகாலம் வரையில் இதற்கு சந்தையில் போட்டியில்லை. எப்போதும் அமேசான் நிறுவனம் தனது ப்ரைம் வீடியோ சேவையைத் தொடங்கியதோ அப்போதே இந்த சந்தையின் மதிப்பு என்ன, அதில் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதை மற்ற முக்கிய நிறுவனங்கள் கண்டுகொண்டன.

தொடர்ந்து டிஸ்னி நிறுவனம், தனது அனைத்து படைப்புகளையும் டிஸ்னி + என்ற புதிய ஸ்ட்ரீமிங் சேவைக்கு நகர்த்த முடிவு செய்துவிட்டது. விரைவில் டிஸ்னி + சந்தைக்கு வருகிறது. அதே வேளையில் 2016லிருந்தே ஆப்பிள் நிறுவனமும் தனது ஸ்ட்ரீமிங் சேவையைத் தொடங்க திட்டமிட ஆரம்பித்துவிட்டது. தற்போது ஆப்பிள் டிவி+ என்ற பெயரில் ஸ்ட்ரீமிங் சேவையைத் தொடங்கியுள்ளது.

சர்வதேச அளவில் இந்திய உட்பட 100 நாடுகளில், நவம்பர் 1 முதல் இந்த சேவை செயல்பட ஆரம்பிக்கும். இந்தியாவில் இதன் சந்தா விலை மாதம் ரூ.99. ஒரு வாரம் இலவசமாகப் பயன்படுத்திப் பார்க்கவும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. புதிய ஐபோன், ஐபாட், ஆப்பிள் டிவி, மேக், ஐபாட் டச் உள்ளிட்ட சாதனங்களை வாங்குபவர்களுக்கு ஆப்பிள் டிவி+ன் ஒரு வருட சந்தா இலவசமாக வழங்கப்படும். மேலும் ஒரு ஆப்பிள் டிவி+ கணக்கை ஆறு தனிநபர்கள் வரை கூடுதல் கட்டணமின்றிப் பயன்படுத்தலாம்.

ஆப்பிள் டிவி+ தளத்துக்கென்றே பிரத்யேகமாக தொடர்கள், படங்களை உருவாக்க 6 பில்லியன் டாலர்களை அந்நிறுவனம் முதலீடு செய்துள்ளது. குறிப்பாக இதில் ஜெனிஃபர் அனிஸ்டன், ரீஸ் விதர்ஸ்பூன், ஸ்டீவ் கேரல் உள்ளிட்ட ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் 'தி மார்னிங் ஷோ' என்ற வெப் சீரிஸின் தயாரிப்பு செலவு, 'கேம் ஆப் த்ரோன்ஸி'ன் செலவை விட அதிகம் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆப்பிள் டிவி+ல், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் ஒரு தொடர், 'கேப்டன் அமெரிக்கா' நாயகன் க்ரிஸ் ஈவன்ஸ் நடிப்பில் ஒரு தொடர், 'ஆக்வாமேன்' நாயகன் ஜேசன் மோமோ நடிப்பில் ஒரு தொடர், 'ஸ்டார் ட்ரெக்' புகழ் ஜே ஜே ஆப்ராம்ஸ் இயக்கத்தில் ஒரு தொடர், மனோஜ் நைட் ஷ்யாமளன் தயாரிப்பில் ஒரு தொடர் என பல்வேறு தொடர்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் 'கேப்டன் மார்வலா'க நடித்த ப்ரை லார்சன், 'தார் ராக்னராக்' இயக்குநர் டைகா வைடிடி, சர்வதேச தொலைக்காட்சி பிரபலம் ஓபரா வின்ஃப்ரே ஆகியோரை வைத்து புதிய நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டு அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடந்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x