Published : 13 May 2014 10:00 AM
Last Updated : 13 May 2014 10:00 AM

நூலகங்களில் பயன்படும் `லிப்பாட்’ ரோபோ விஐடி மாணவர்கள் உருவாக்கி சாதனை: இருந்த இடத்திலிருந்தே வை-ஃபை மூலம் இயக்க முடியும்

நூலகங்களில் புத்தக அலமாரிகளை கண்காணிக்கும் நவீன ரோபோவை விஐடி பல்கலைக்கழகத்தின் சென்னை மைய மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

நூலகங்களில் புத்தக அலமாரிகளைக் கண்காணிக்கும் பணியில் தற்போது பணியாட்கள் பயன்படுத்தப் படுகின்றனர். இதில் மனித ஆற்றல் அதிக அளவில் தேவைப்படவில்லை என்பதால் ரோபோக்களை பயன்படுத்த முடியும். அத்தகைய ரோபோவை விஐடி சென்னையைச் சேர்ந்த எம்.டெக். மாணவர்கள் பி.விஷ்ணு, டி.பானி, ஜி.உதய், பிரவீண்குமார் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். பேராசிரியர் சி.எச்.பிரியங்காவின் வழிகாட்டுதலின்படி அவர்கள் இந்த ரோபோவை உருவாக்கி அதற்குலிப்பாட் (LIBBOT) என்று பெயரிட்டுள்ளனர்.

ஒற்றைக் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ள இந்த ரோபோ வின் உதவியுடன் நூலகங்களின் பல தளங்களில் நடப்பவற்றை எளிதாக மேற்பார்வை செய்ய முடியும். இந்த ரோபோ பல இடங்களுக்கு தானாகவே நகர்ந்து சென்று, கேமரா மூலம் காட்சிகளை பதிவு செய்யும்.

இரவிலும் காட்சிகளை பதிவு செய்யும் திறன் இதற்கு உண்டு. வை-ஃபை உதவியுடன் இந்த ரோபோவை எந்த இடத்திலிருந்தும் இயக்க முடியும். பேச்சுகளையும், சிறு சிறு ஒலிகளையும் பதிவு செய்ய முடியும். நேராகவும், பின்நோக்கியும் இதனால் நகர முடியும்.

‘லிப்பாட்’ ரோபோவில் 4 மோட்டார்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவை இயங்க 2 பாட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. கரடுமுரடான மேற்பரப்பிலும் சீராக நகரக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது விஐடி சென்னை நூலகத்தில் வெற்றிகரமாக இயக்கி பரிசோதனை செய்யப்பட்டது.

‘லிப்பாட்’ ரோபோவை உருவாக்க ரூ.25 ஆயிரம் செலவானது. அதிக எண்ணிக்கையில் தயாரிக்கும்போது ரூ.12 ஆயிரத்துக்குள் இத்தகைய ரோபோவை தயாரிக்க முடியும் என்று மாணவர்கள் தெரிவித்தனர். இந்த புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய மாணவர்களை பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x