Published : 18 Jul 2019 02:24 PM
Last Updated : 18 Jul 2019 02:24 PM

வைரலாகும் 'வயதான' படங்கள்: பாதுகாப்பானதா #faceapp?

ரஷ்ய நிறுவனம் ஒன்று உருவாக்கியிருக்கும் faceapp என்கிற செயலியின் பயன்பாடு கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வருகிறது. 
நமது முகத்தை முதுமைத் தோற்றத்தில் காட்டுமாறு ஒரு filter இந்தச் செயலியில் கொடுக்கப்பட்டிருப்பதால், சிறியவர், பெரியவர் என அனைவரும் இந்தச் செயலியைப் பயன்படுத்தி, அதில் தங்கள் படங்களைப் போட்டு, மாற்றி, அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அடுத்தடுத்து இது போன்ற படங்கள் வைரலாக,  #faceappchallenge என்ற ஹேஷ்டேக் பரவலானது. பல லட்சம் மக்கள் இதில் தங்கள் படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என தேசிய, சர்வதேச பிரபலங்கள் பலரும் இந்தச் செயலியைப் பயன்படுத்தி அதில் தங்கள் தோற்றத்தை மாற்றி, படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். இந்தச் செயலியில் இதோடு வயதானவர்களை இளமையாகக் காட்டும் வசதியும் இருப்பதால், ஒரு பக்கம் அதையும் பயன்படுத்தி படங்களைப் பதிவிட்டு வருகிறது ஒரு தரப்பு.
ஆனால், இந்தச் செயலியின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. மேலும் இது வயர்லெஸ் லேப் என்ற ரஷ்ய நிறுவனம் உருவாக்கியிருக்கும் செயலி என்பதால் அதை சுட்டிக்காட்டி சில அமெரிக்க ஊடகங்கள் இந்தச் செயலியால் அந்தரங்கத்துக்கு ஆபத்து என செய்திகள் வெளியிட்டுள்ளன.

இந்தச் செயலியில் பதிவேற்றப்படும் படங்களை நீங்கள் அந்த நிறுவனத்துக்குக் கொடுக்கிறீர்கள். அதை வைத்து அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் அதை இலவசமாக உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இதற்கான ஒப்புதலை நீங்கள் ஏற்கெனவே செயலியைப் பதிவிறக்கம் செய்யும்போது, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சரியாகப் படிக்கமால் கொடுத்திருப்பீர்கள். மேலும் இதை நீங்கள் திரும்பப் பெற முடியாது. இந்தச் செயலியை உங்கள் மொபைலிலிருந்து நீக்கினாலும் உங்கள் புகைப்படங்கள் அந்த நிறுவனத்தின் சர்வரில் இருக்கும்.


இளமையான தோற்றத்தில் டொனால்ட் ட்ரம்ப், நடிகர் ஜீவா

மேலும், உங்கள் கேமராவில் நீங்கள் எடுக்கும் எல்லா புகைப்படங்களையும், வீடியோக்களையும் இந்தச் செயலியால் தானாக எடுத்துக்கொள்ள முடியும் என இந்தச் செயலியில் இருக்கும் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்தும் சில தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

"புகைப்படங்கள் சர்வரில் பதிவேற்றப்படுவது உண்மைதான். ஆனால் சர்வர்களில் அவை தங்கிவிடாது. 48 மணிநேரங்களில் நீக்கப்படும். பயனர் தேர்வு செய்யும் புகைப்படம் மட்டுமே பதிவேற்றப்படும். வேறெந்த படத்தையும் நாங்கள் மொபைலிலிருந்து எடுப்பதில்லை. எங்கள் நிறுவனம் ரஷ்யாவில் இருந்தாலும் பயனர் தகவல்கள் எதுவும் அங்கு செல்வதில்லை. 

மேலும் பயனர்கள், அவர்களைப் பற்றிய தகவல்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் அதை உடனே செயல்படுத்துகிறோம். பயனர் தகவல்கள் எதையும் நாங்கள் யாரிடமும் பகிர்வதில்லை, விற்பதில்லை" என வயர்லெஸ் லேப் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இந்தச் செயலியின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விவாதங்கள் இன்னமும் சமூக வலைதளங்களில் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் இன்னொரு பக்கம் வயதான புகைப்படங்களை பகிர்பவர்கள் எண்ணிக்கை குறைவது போலத் தெரியவில்லை. 
2017-ல் வெளியான இந்தச் செயலியும் அதில் இருக்கும் அம்சங்களும், இப்போது ஏன் வைரலாகிறது என்பதுதான் புரியாத புதிர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x