Published : 24 Jul 2015 15:22 pm

Updated : 24 Jul 2015 15:22 pm

 

Published : 24 Jul 2015 03:22 PM
Last Updated : 24 Jul 2015 03:22 PM

ஹேக் பண்ண முடியாத ஸ்மார்ட்ஃபோன்

அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவில் புதிதாக ஒரு ஸ்மார்ட் ஃபோன் தயாரிக்கப்பட்டுவருகிறது. இதை ஹேக் பண்ண முடியாது. இது வாட்டர் புரூஃப் வசதி கொண்டது. இது மட்டுமல்ல லிக்யூட்மார்ஃபியம் என்னும் மிக உறுதியான உலோகக் கலவையிலானது. இந்த உலோகக் கலவை டைட்டேனியம், ஸ்டீல் ஆகியவற்றை விட உறுதியானது. 5.5 அங்குலத் திரை கொண்டது. பயனாளியின் கைரேகையைக் கொண்டே இதன் இயக்கத்தைத் தொடங்க முடியும். டரிங் ரோபாடிக் இண்டஸ்ட்ரீஸ் என்னும் நிறுவனம் இதை தயாரிக்கிறது.

நீர்புகாத் தன்மை கொண்டது என்பதால் சீல் வைக்கப்பட்டிருக்குமோ எனச் சந்தேகப்பட வேண்டாம். நீர் உள்ளே போகும் ஆனால் எளிதில் உலரும் வகையில் நானோ கோட்டிங் என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இது உருவாக்கப்படுகிறது. இந்த ஃபோனுக்கான ஆர்டர் வரும் 31-ம் தேதி தொடங்கப்போகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விலை சுமார் 39 ஆயிரம் ரூபாய் என்கிறார்கள்.


மோட்டோ ஜி 3 ஜென்

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி ஸ்மார்ட் போனின் தேர்ட் ஜெனரேஷன் மொபைல்களும் மோட்டோ எக்ஸ் மொபைலும் வரும் 28-ம் தேதி அறிமுகமாக உள்ளன. இதற்கான அழைப்பிதழ்களை மோட்டோரோலா நிறுவனம் அனுப்பிவைத்துவருகிறது. இந்த அறிமுக விழா புதுடெல்லி, லண்டன், நியூயார்க், சான் பிரான்ஸிஸ்கோ ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. முதலில் விழா, புதுடெல்லியில் தொடங்கிப் பிற நகரங்களில் தொடர உள்ளது. வெள்ளை நிறத்தில் 8 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக இது இருக்கும். 5 அல்லது 50.2 அங்குல ஹெச்டி திரையைக் கொண்டிருக்கும். இதன் புராஸசர் 1.7 ஜிகா ஹெர்ட்ஸ், ராம் 2 ஜிபி.

ராக்ஸ்டார் ஹெட்ஃபோன்கள்

இசைப் பிரியர்களுக்காகக் கண்ணைக் கவரும் வண்ணங் களில் ஜீப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் புதிய ஹெட்ஃபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உள்ளேயே பொருத்தப்பட்ட மைக் மற்றும் மொபைல் சாதனங்களுக்கான வசதிகள் கொண்ட புதிய தலைமுறை ஹெட்ஃபோன் இது. பின்புறம் மூடப்பட்ட இந்த ஹெட்ஃபோன் சிகப்பு, நீலம் என இரு வண்ணங்களில் கிடைக்கிறது. சொகுசான பயன்பாட்டுக்காக மென்மையான செவிவளையங்கள் இந்த ஹெட்ஃபோனில் உள்ளன. ராக்ஸ்டார் ஹெட்ஃபோன் மிகவும் எடை குறைவானது, அணிந்துகொள்ளச் சுலபமானது. இதன் விலை ரூ 599/. ஒரு வருட உத்திரவாதத்துடன் இது விலைக்குக் கிடைக்கிறது.

ஜியோமி ஸ்மார்ட் வாட்டர் ப்யூரிஃபையர்

மொபைல் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சீன நிறுவனம் ஜியோமி தனது ஸ்மார்ட் வாட்டர் ப்யூரிஃபையர் சாதனத்தை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. எம்ஐ வாட்டர் ப்யூரிஃபையர் எனப்படும் இது ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும். இதன் மூலம் எளிதில் போர் வாட்டரைக் குடிநீராக மாற்றிக்கொள்ள முடியும்.

இந்தச் சாதனத்தில் ஃபில்டரை மாற்ற வேண்டிய நிலை வரும்போது நமது ஸ்மார்ட் ஃபோன் வழியாக நம்மை எச்சரித்து மாற்ற வைக்கும். மொத்தம் இந்த சாசனத்தில் நான்கு ஃபில்டர்கள் நீரைத் தூய்மைப்படுத்த செயல்படும். ஒரு ஏ4 பேப்பர் போன்ற அடக்கமான, அளவில் சிறியதாகக் காணப்படும் இந்த ப்யூரிஃபையர் வழக்கமான ப்யூரிஃபையரைவிட 8 மடங்கு விரைவாகச் செயல்படும் என ஜியோமி நிறுவனம் தெரிவிக்கிறது. இதன் விலை ரூ. 13,284.

வந்துவிட்டது ஸ்மார்ட் ஷூ

ஜியோமி மொபைல் நிறுவனம், ஸ்போர்ட் சாதனத் தயாரிப்பு நிறுவனமான லி நிங்குடன் இணைந்து புதிய ஸ்மார்ட் ஷூவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷூ ப்ளுடூத் தொழில்நுட்பத்தின் மூலமாக ஸ்மார்ட் ஃபோனுடன் இணைந்துகொள்ளும். ஷூவின் அடிப்பாகத்தில் சென்சார் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த சென்சார் உதவியால் நாம் எத்தனை அடி எடுத்துவைக்கிறோம் என்பதை அறிந்துகொள்ள முடியும். அதே போல் எவ்வளவு கலோரி எரிகிறது என்ற தகவலும் தெரிந்துவிடும். ஆகவே, எவ்வளவு கலோரியை எரிக்க வேண்டுமோ அந்த அளவை அறிந்து அதற்கேற்றவாறு நாம் ஓடலாம். இந்த ஷூ வாட்டர் புரூப் வசதி கொண்டது. இதன் விலை ரூ. 2,035. சீனாவில் கடந்த 20-ம் தேதி முதல் விற்பனைக்கு இது வந்துள்ளது.


கேட்ஜெட் கார்னர்சாதனம்புதுமைடெக்னாலஜிஆர்வம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x