

பொதுவாக சாக்லேட்டுகளின் மேற்பகுதியில் வெள்ளை பூத்துவிட்டால் அதை சாப்பிட மறுத்து விடுவோம். சாக்லேட் கூழ்மத்தில் ஏற்படும் மாற்றங்களே வெள்ளைப் பூப்பதற்கு முக்கிய காரணமாகவுள்ளது. இதனை தடுக்க ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய வழிமுறை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதன்படி சாக்லேட்டுகளை தயாரிக்கும் போதே அவற்றின் மீது எக்ஸ்ரே கதிர்களை பாய்ச்சி (X-Ray) அதன் மேல்பகுதி பூத்துவிடாமல் பாதுகாக்கிறார்கள்.
வெங்காயம் மூலம் செயற்கை தோல்
வெங்காயத்தோல் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வெங்காயத்திலிருந்து தயாரிக்கப்படும் தோலைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
தைவான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளனர். வெங்காயத்தோலை கோல்டு பிளேட்டிங் முறைப்படி உண்மையான தோல் போலவே வடிவமைக்க முடியும் என்பது இவர்களின் கண்டுபிடிப்பு. ரோபோட்டிக்ஸ் போன்ற தொழில்நுட்பங்களுக்கு இந்த செயற்கை தோலை பயன்படுத்த முடியுமாம்.
ஐ-போன் மைக்ரோஸ்கோப்
ஐ-போனைக் கொண்டு மைக்ரோஸ்கோப் ஒன்றை உருவாக்கி யுள்ளனர் அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் தடுப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள். ஐ-போன் 5 உடன் மைக்ரோஸ்கோப்பை இணைத்து அதன் மூலம் ரத்த பரிசோதனைகளை செய்ய முடியும். கொடிய நோய்களுக்கு காரணமான ஒட்டுண்ணிகளை கண்டுபிடித்து அதற்கேற்ப சிகிச்சை வழங்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.