Published : 21 May 2014 09:46 AM
Last Updated : 21 May 2014 09:46 AM

இரவில் ஸ்மார்ட் போன்களை அணைத்துவிட்டுப் படுங்கள்: ‘அணைத்துக்கொண்டு’ அல்ல!

இரவில் ஸ்மார்ட் போன்கள், டேப்லட்களை அணைத்துவிட்டுத் தூங்கச் செல்லுங்கள். இல்லாவிட்டால் தூக்கம் பாதிக்கப்படும் என்கிறது ஓர் ஆராய்ச்சி.

இதுகுறித்து அமெரிக்க வேதியியல் சங்கத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பிரையன் ஸோல்டோவ்ஸ்கி கூறியிருப்பதாவது:

இரவா, பகலா என்று அனிச்சையாக நாம் உணர்வதில் வெளிச்சத்தின் பங்கு முக்கியமானது. பொதுவாகவே, மாலை நேரம் ஆகஆக புறச்சூழலில் சிவப்பு நிறம் அதிகரிக்கிறது. கண்ணின் ஆழப்பகுதியில் இருக்கும் செல்களில் உள்ள மெலனாப்சின் என்ற புரோட்டீன் மீது இந்த சிவப்பு நிறம் விழும்போது, ‘பொழுது போய்விட்டது. படுக்கப் போ’ என்று அந்த செல்கள், மூளைக்கு உத்தரவிடுகின்றன. ஆக, இரவு நேரம் என்றால் கண்ணில் சிவப்பு நிற ஒளிதான் படவேண்டும்.

இந்த லாஜிக்கை ஸ்மார்ட்போன்கள், டேப்லட்கள் குளறுபடி செய்கின்றன. அவற்றில் இருந்து வெளியேறும் நீல நிற ஒளியானது தொடர்ந்து கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தால் ‘இன்னும் இரவு நேரம் வரவில்லை’ என்ற தவறான தகவலைத்தான் கண் செல்கள், மூளைக்குக் கடத்தும். ஏனென்றால், நீலநிறம் என்பது அதிகாலை நேரத்துக்கானது. ‘தூங்கியது போதும்’ என்று படுக்கையில் இருந்து நம்மை எழுப்பிவிடுவதற்கானது.

எனவே, தொந்தரவு இல்லாத ஆழ்ந்த உறக்கம் கிடைக்க வேண்டும் என்றால் ஸ்மார்ட்போன், டேப்லட்களை அணைத்துவிட்டுப் படுங்கள். இல்லாவிட்டால் கண்ணில் படாத வகையில் தூர வைத்துவிட்டாவது படுங்கள் என்கிறார் அந்த ஆராய்ச்சியாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x