ஆப்பிள் பெண்மணி எங்கே?

ஆப்பிள் பெண்மணி எங்கே?
Updated on
1 min read

ஆப்பிள் அபிமானிகள் அதன் பழைய கம்ப்யூட்டர்களைத் தூக்கி எறிந்துவிடுவதில்லை.

அவை கலெக்டர்ஸ் அயிட்டம். அதிலும் ஆரம்ப கால ஆப்பிள் கம்ப்யூட்டர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அவை பொக்கிஷம்தான்.

இப்படிப் பொக்கிஷமாகக் கருதப்படும் ஆரம்ப கால ஆப்பிள் கம்ப்யூட்டரைத்தான் அமெரிக்கப் பெண்மணி ஒருவர் அதன் அருமை தெரியாமல் மறுசுழற்சி மையத்தில் பழைய குப்பைகளோடு கொடுத்துச் சென்றிருக்கிறார். கலிபோர்னியாவில் அமைந்துள்ள கிளின் பே ரீசைக்ளிங் மையம் எனும் அந்த அமைப்பும் உடனே இந்தக் குப்பைகளைப் பிரித்துப் பார்க்காமல் கிடப்பில் போட்டுவிட்டது.

பின்னர் எடுத்துப் பார்த்தபோதுதான் அதில் மிகவும் அரிதான ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் இருப்பது தெரிய வந்தது. ஆப்பிள் நிறுவனர்கள் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வாஸ்னியோக் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டு அவர்கள் கைப்பட உருவாக்கப்பட்ட இந்த கம்ப்யூட்டர்கள் மொத்தமே 200 அளவில்தான் தயாரிக்கப்பட்டன. இவற்றில் மிகச் சில மட்டுமே எஞ்சி யிருப்பதாகக் கருதப்படுகிறது. இவற்றில் ஒன்றான இந்த அரிய கம்ப்யூட்டரை மறுசுழற்சி மையம் சேகரிப்பாளர் ஒருவரிடம் 2 லட்சம் டாலர்களுக்கு விற்றுள்ளது.

மையத்தின் கொள்கைப்படி இதன் மூலம் கிடைத்த தொகையை ( ஒரு லட்சம் டாலர்) ஒப்படைப்பதற்காக அந்தப் பெண்மணியைத் தேடிக் கொண்டிருக்கிறது. இதற்காக வீடியோ பதிவு ஒன்றையும் உருவாக்கித் தனது தளத்தில் வெளியிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in