

ஸ்மார்ட் போனின் தொடுதிரையைப் பாருங்கள். அது உங்கள் விரலின் மொழிகளை எப்படி எல்லாம் புரிந்துகொள்கிறது. தொட்டால் “இருக்கிறேன்” என்கிறது. குறுக்கே விரலால் கோடு கிழித்தால் திறக்கிறது. நேர்க் கோடு கிழித்தால் ஒரு அர்த்தம் சொல்கிறது. அதற்கு எதிர் திசையில் கோடு கிழித்தால் வேறொரு அர்த்தம் சொல்கிறது.
காதல் ஸ்கிரீன்
தொடுகையின் மொழியை விதவிதமாக வெளிப்படுத்தத் தெரிந்தவர்கள் காதலர்கள் மட்டுமல்ல. டச் ஸ்கிரீனும்தான். உங்களின் விரல்களுக்குள் அடங்கும்விதமாக உள்ள ஸ்மார்ட் போனின் தொடுதிரையே மற்றவர்களின் கண்களுக்குப் புலப்படாதவகையில் உங்களின் சட்டையில் கலந்திருந்தால் எப்படி இருக்கும்? உங்களின் சட்டையின் முன்கைப் பகுதியிலோ முன்புறத்திலோ உள்ள துணியை ஒரு ஸ்மார்ட் போனின் தொடுதிரைபோலக் கையாண்டால் எப்படி இருக்கும்?
ஸ்மார்ட் சட்டைகள்
எதிர்கால ஆடைகளில் இந்த தொழில்நுட்பம் வரப்போகிறது. கூகுள் நிறுவனம் பிரபலமான ஆடை நிறுவனங்களுடன் இணைந்து இந்தப் புதுமையான திட்டத்தைத் தயாரித்துவருகிறது. இதற்கான ஆய்வுகள் இன்னமும் ஆரம்ப நிலையிலே இருந்தாலும், மும்முரமான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.
பருத்தியோ, செயற்கையான நூல் இழைகளோ துணியாக நெய்யப்படும்போது தனித்துவமான உலோக இழைகளும் அவற்றோடு சேர்ந்து நெய்யப்படும். அந்தத் துணிகளை வைத்து உடைகள் தயாரிக்கப்படும். அதில் ஒரு எலக்ட்ரானிக் சர்க்யூட்டும் வைக்கப்படும். அந்தச் சட்டைகள் செல்போன் அலைகளை உள்வாங்கக்கூடியதாக இருக்கும். உங்கள் விரல்களின் தொடு மொழியை நன்கு புரிந்துகொண்டு உங்கள் சட்டை பதிலளிக்கும். உங்கள் ஸ்மார்ட் போனோடு இணைந்து சட்டை செயல்படும்.
அலாவுதீன் விளக்கிலிருந்து புறப்பட்ட அற்புதமான பூதத்தைப் போலக் கணினித் துறையிலிருந்து மென்பொருள் தொழில்நுட்பம் கிளம்பியது. பல்வேறு துறைகளிலும் இப்போது ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த ஆதிக்கம் மேலும் மேலும் விரிவடையும். எதிர்காலச் சட்டைகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
எப்போது கிடைக்கும் எனக்கு அந்த டச் ஸ்கிரீன் சட்டை என்கிறீர்களா?
முதலில் இதைப் பார்த்து ரசிங்க: >Google plans on turning your clothes into touchscreens