

இணைய உலகில் சமீபத்தில் பிரபலமாகி இருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கம் மை கிட் காண்ட் ஈட் திஸ் (>https://instagram.com/mykidcanteatthis/). அம்மாக்களால் அம்மாக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதை அம்மாக்கள்தான் பார்த்து ரசிக்க வேண்டும் என்றில்லை. அம்மாக்கள் இந்தப் பக்கத்தைப் பார்த்தால் ஆறுதல் அடைவார்கள் என்றாலும், தங்களை மறந்து சிரிக்க விரும்பும் யாரும் இதில் உள்ள ஒளிப்படங்களை பார்த்து ரசிக்கலாம்.
இந்தப் பக்கத்தில் அப்படி என்ன இருக்கிறது? உணவு! விதவிதமான உணவு ஒளிப்படங்கள்தான். இந்த உணவுப் படங்களைப் பகிர்ந்துகொள்ளும் அம்மாக்கள் அதனுடன் அந்த உணவைத் தங்கள் பிள்ளைகள் சாப்பிட மறுப்பதற்கான காரணத்தையும் மிக ஜாலியாகப் பகிர்ந்துள்ளனர்.
சாம்பிளுக்குச் சிலவற்றைப் பார்க்கலாமா? “இந்த ஜூஸ் ரொம்பவும் ஈரமாக இருக்கிறது”- இது ஒரு குழந்தையின் மறுப்பு.
“இந்த வாழைப் பழம் வேண்டாம். ஏனா.. இதன் தோலை அம்மா உரித்துவிட்டார். அப்பாதான் உரித்திருக்க வேண்டும்”- இது இன்னொரு குழந்தையின் மறுப்பு.
“இந்த நூடுல்ஸ் வேண்டாம், இது ரொம்ப நூடுலாக இருக்கிறது...”
இப்படிச் சாப்பாடு வேண்டாம் என்று சொல்வதற்குக் குழந்தைகள் எத்தனை கிரியேட்டிவான காரணங்களை எல்லாம் சொல்கின்றனர்! இதைக் கேட்டு நொந்துபோகும் அம்மாக்கள், இவற்றைப் படத்தோடு இந்தத் தளத்தில் வெளியிட்டுவருகின்றனர்.
ஒவ்வொரு குறிப்பும், என் குழந்தை இதைச் சாப்பிட மறுக்கிறான் (“My Kid Can't Eat This”) எனப் பொருள்படும் ஹாஷ்டேகுடன் அமைந்துள்ளது. அம்மாக்கள் மட்டும் அல்ல அப்பாக்களும் படங்களைப் பகிர்ந்துவருகின்றனர்.
மூன்று குழந்தைகளின் அம்மாவான ஹீதர் எனும் அமெரிக்கப் பெண் தன் பிள்ளைகளைத் தினமும் சாப்பிட வைக்கப்படும் பாட்டைப் பதிவு செய்வதற்காக இந்தப் பக்கத்தை உருவாக்கியதாகச் சொல்கிறார். உணவை வேண்டாம் என மறுப்பதற்காகக் குழந்தைகள் சொல்லும் காரணம் விழுந்து விழுந்து சிரிக்கவைக்கின்றன.
இன்னும் நூறு படங்களைக்கூடத் தாண்டவில்லை, அதற்குள் 76 ஆயிரத்துக்கும் மேலான ஃபாலோயர்கள் சேர்ந்துவிட்டனர். இதே பெயரில் பேஸ்புக் பக்கமும் இருக்கிறது. பிள்ளைகள் இந்தப் பக்கத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ!