

பொறியியல் மாணவர்களின் புராஜெக்டு போல விளையாட்டாக ஆரம்பித்த டிரான் தொழில்நுட்பம் இன்று உலக அளவில் தவிர்க்க முடியாத கருவியாக மாறிக் கொண்டிருக்கிறது. வானத்தில் குறிப்பிட்ட உயரம் வரை பறக்கும் இந்த டிரான் கருவி தற்போது புகைப்படங்கள், வீடியோ எடுக்கும் வேலைகளுக்கு அனுமதிக்கப்படுகிறது.
மனிதன் செல்ல முடியாத பகுதிகள், கூட்ட நெரிசல்களை ட்ரான் உதவியோடு படம் பிடிக்கலாம். இதன் அடுத்த கட்டமாக தானியங்கி ட்ரான் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விநியோகம் செய்யும் வேலைகளையும் செய்ய முடியும்.
அமேசான் நிறுவனம் இப்படி பொருட்களை விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக நடந்துவிட்டால் ட்ரான் தொழில்நுட்பம் கிடுகிடுவென வளர்ச்சி கண்டுவிடும் வாய்ப்புள்ளது.
அதே சமயத்தில் பல புதிய சிக்கல்களையும் இந்த கருவி கொண்டுவருகிறது. இந்த ஆளில்லாத கருவியை நாச வேலைகளுக்கு பயன்படுத்தினால் என்ன செய்வது என்கிற குழப்பமும் நீடிக்கிறது.
இதற்கு ஏற்ப கடந்த மாதத்தில் இங்கிலாந்து அரச மாளிகைக்கு அருகில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு ட்ரானைக் கண்டுபிடித்து நிறுத்தியிருக்கின்றனர். ஜனவரி மாதத்தில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வளாகத்திலும் ஒரு டிரான் சுற்றிக்கொண்டிருந்ததை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து முறியடித்தனர்.
இதனால் ட்ரானை அனுமதிப்பதா வேண்டாமா என்கிற குழப்பத்தில் உள்ளது உலகம்.