சமூக வலைத்தளங்களில் வலம் வரும் 73% இந்திய சிறார்கள்!

சமூக வலைத்தளங்களில் வலம் வரும் 73% இந்திய சிறார்கள்!
Updated on
1 min read

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் 73% இந்திய சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் துணையுடன் கணக்கு வைத்திருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

அசோசேம் நடத்திய இந்த ஆய்வில், சிறுவர்கள் தங்களது பெற்றோரின் உதவியுடன் சமூக வலைத்தளங்களில் கணக்குகள் தொடங்கப்படுவதாக கூறியுள்ளது.

இந்த ஆய்வு சென்னை, மும்பை, புது டெல்லி ஆகிய நகரங்களில் உள்ள 4,200 பெற்றோர்களிடமும், 11, 13 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரிடமும் நடத்தப்பட்டது.

இதுகுறித்து அசோசேம் வெளியிட்ட அறிக்கையில், "8 முதல் 13 வயது வரை உள்ள 73% இந்தியச் சிறார்கள் தங்களது பெற்றோருக்கு தெரிந்தே சமூக வலைத்தளங்களில் கணக்கு துவங்குகிறார்கள். பொய்யான வயதை குறிப்பிட்டு தங்கள் குழந்தைகள், சமூக வலைதளங்களில் வலம் வருவதை 82 சதவீதம் பெற்றோர்கள் அனுமதிக்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த ஆய்வில் மற்றோரு உண்மையும் தெரியவந்துள்ளது. அதாவது, வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் பிள்ளைகள் மிக அதிகமான அளவில் இது போன்ற சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகின்றனர்.

இது குறித்து அசோசேம் பொது செயலாளர் டி.எஸ்.ராவத் கூறுகையில், "சமூக வலைத்தளங்களில் இருக்கும் தகவல்கள், மக்கள், சூழ்நிலை ஆகிய அனைத்தும் சிறுவர்களை தவறான பாதைக்கு கொண்டுச் செல்ல வாய்ப்புள்ளது" என்று எச்சரித்தார்.

கடந்த ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம், 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக் வலைத்தளத்தில் கணக்கு துவங்க கூடாது என்று அதன் முகப்பு பக்கத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in