Last Updated : 05 May, 2015 02:20 PM

 

Published : 05 May 2015 02:20 PM
Last Updated : 05 May 2015 02:20 PM

ஒரு தேசத்துக்காக இன்ஸ்டாகிராமில் இணைந்த புகைப்படக் கலைஞர் படை

பூகம்பம் உலுக்கிய நேபாளத்தில் காணும் காட்சிகள் எல்லாம் நெஞ்சை உலுக்குவதாக இருக்கின்றன. இந்தப் புகைப்படங்கள் பாதிப்பின் தீவிரத்தை பதிவு செய்வதோடு, நிவாரணத்துக்கு நேசக்கரம் நீட்டுவதற்கான தேவையையும் உணர்த்தி வருகின்றன.

அந்த வகையில், பேசும் படங்களின் பக்கமாக அமைந்து, நிலைகுலைந்து போயிருக்கும் நேபாளத்தின் நிலையை உரக்க எடுத்துச்சொல்லும் வகையில் நேபாள்போட்டோபிராஜக்ட் புகைப்பட பக்கம் அமைந்துள்ளது.

புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பக்கத்தில், களத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் புகைப்படக் கலைஞர்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளை புகைப்படங்களாக பதிவு செய்து வருகின்றனர். இந்தப் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் கள நிலவரம் எத்தனை தீவிரமாக இருக்கிறது என்பதை புரிய வைக்கின்றன.

பூகம்ப பாதிப்புக்கு பிறகு நேபாளத்தில் உள்ள பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக சேவைகளை தகவல் பரிமாற்றத்துக்கும், மீட்பு பணிகளை ஒருங்கிணைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.

சர்வதேச சமூகம் உதவிக்கு ஓடோடி வந்தாலும், இன்னமும் உதவி சென்று சேராமல் இருக்கும் பகுதிகளை கண்டறிந்து உள்ளூர் தன்னார்வலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

உருக்குலைந்த கட்டிடங்கள், சிதிலமடைந்த சாலைகள் எனும் அவலமான நிலையில் மக்கள் பரிதவித்துக்கொண்டிருக்கும் நேபாளத்தில் இன்னமும் நிவாரணப் பணிகளில் தேவை நீடிக்கிறது.

இந்தப் பணிகளை மேலும் சிறப்பாக ஒருங்கிணைக்க உதவும் வகையில் பாதிப்பு பற்றிய தகவல்களை நேபாள் போட்டோ பிராஜக்ட் இன்ஸ்டாகிராம் புகைப்பட பக்கம் வழங்கி வருகிறது.

தொழில்முறை புகைப்பட கலைஞர்களின் கூட்டு முயற்சியால் உருவான இந்தப் பக்கம், பூகம்பம் தாக்கிய சில மணி நேரங்களில் அமைக்கப்பட்டது.

இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த புகைப்பட கலைஞர்கள் இந்தப் பக்கத்தில் தாங்கள் எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். மற்றவர்கள் எடுக்கும் புகைப்படங்களும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

#nepalphotoproject, #nepalearthquake போன்ற ஹாஷ்டேகுடன் இந்தப் புகைப்படங்களை அவற்றுக்குரிய புகைப்பட குறிப்புகளுடன் வெளியிட்டு வருகின்றனர். இந்தப் படங்கள் ஃபேஸ்புக் பக்கத்திலும் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்தப் படங்கள் நேபாளத்தின் கள நிலையை கச்சிதமாக படம் பிடித்து காட்டுகின்றன. ஒரு புகைப்படம் ராணுவத்தினர் நிவாரணப் பொருட்களை விமானத்தில் கொண்டு செல்வதை காட்டுகிறது என்றால், இன்னொரு புகைப்படம் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் நிவாரணப்பணியில் ஈடுபட்டிருப்பதை காட்டுகிறது. இன்னும் சில படங்கள் தரைமட்டமாக கிடக்கும் கட்டிடங்களின் இடிபாடுகளை படம் பிடித்து பதைபதைக்க வைக்கின்றன.

உணவுப் பொருட்களை பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சி, இடிப்பாட்டில் இருந்து மக்கள் தங்கள் உடமைகளை எடுக்க முயலும் காட்சி என பாதிப்பின் தீவிரம் காட்சிகளாக இந்தப் புகைப்பட வரிசையில் விரிகின்றன.

ஆரம்பத்தில் மீட்பு பணி தொடர்பான புகைப்படங்களும் அவசர உதவி தேவைப்படும் இடங்களின் படங்களும் இடம்பெற்றிருந்தன. தற்போது நிவாரணம் தொடர்பான புகைப்படங்கள் அதிகம் இடம்பெறுகின்றன.

இந்தப் புகைப்படங்களுடன் இடம்பெறும் குறிப்புகள் நெஞ்சை நெகிழ வைக்கும் மனித நேயக் கதைகளையும் கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, பூகம்பம் பாதித்த பகுதியில் டீக்கடை நடத்தி வரும் மூதாட்டி ஒருவர், தனது கடை தரைமட்டமாகாமல் தப்பி பிழைத்த நிலையில், மற்றவர்களுக்கு தேவைப்படும் டீ மற்றும் தண்ணீர் ஆகியவற்றை வழங்குவதற்காக இந்தக் கடையை நடத்தி வருவதாக சொல்கிறார். இது போன்ற நேரங்களில் எல்லோரும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிறார் அவர்.

இன்னொரு படம் சிறுவர் - சிறுமிகள் செங்கற்களை கொண்டு வீடு கட்ட முயலும் காட்சியை விவரிக்கிறது. காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை கோரும் புகைப்படங்களும் இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளன.

நிலமை எத்தனை மோசமாக இருக்கிறது என்பதை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் இந்தப் புகைப்படங்கள் நேசக்கரம் நீட்டவும் நிதி உதவி அளிக்கவும் தூண்டுகோளாக இருக்கிறது.

நேபாள பாதிப்பை உணர்த்தும் இன்ஸ்டாகிராம் பக்கம்:>https://instagram.com/nepalphotoproject/

*

சைபர்சிம்மனின் வலைதளம்>http://cybersimman.com/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x