இணையம் கொண்டான்

இணையம் கொண்டான்
Updated on
1 min read

இணையத்தில் கேலிக்கு ஆளாகித் தலைகுனிந்து நின்ற மனிதர் இணைய வெற்றிக் கதையாகி இருக்கிறார். பிரிட்டனைச் சேர்ந்த சீன்’ஒ பிரைன் உடல் பருமன் அதிகம் கொண்டவர். அவர் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்க விண்ணப்பித்தபோது இணையத்தில் சிலரால் கேலி செய்யப்பட்டார்.

அவர் நடனமாடும் ஒளிப்படமும், கேலி வாசகங்களும் இணையத்தில் வெளியாயின. ஆனால் அதன் பிறகு நடந்ததுதான் இணைய அற்புதம். உடல் பருமன் காரணமாகக் கேலி செய்யப்பட்ட அவருக்கு ஆதரவாக டிவிட்டரில் குறும்பதிவுகள் குவிந்தன.

உடல் அமைப்பு நடனமாடும் ஆர்வத்துக்குத் தடையாக இருக்கக் கூடாது என இணையவாசிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த காஸ்ண்ட்ரா பேர்பேங்க்ஸ் எனும் எழுத்தாளர் சீன், ஒவுக்கு பிரத்தியேக நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதாகக் கூறி அவர் அடையாளத்தை வெளிக்காட்டுமாறு அழைப்பு விடுத்தார்.

இந்த ஆதரவால் நெகிழ்ந்த சீன்’ஒ தன்னை டிவிட்டரில் வெளிப்படுத்திக்கொண்டார்.

அவருக்காகத் திட்டமிடப்பட்ட நடன நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் கோலாகலமாக நடந்திருக்கிறது. சீன்’ஒ உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்திருக்கிறார். அவரைக் கேலி செய்தவர்களை இணையம் தலைகுனிய வைத்து விட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in