

யாருக்குத்தான் செல்ஃபி ஆர்வம் இல்லை சொல்லுங்கள். ஸ்மார்ட் போன் பிரியர்களுக்குக் கச்சிதமாக செல்ஃபி எடுக்க உதவும் செல்ஃபி குச்சிகளும் நன்கு அறிமுகமானவைதான். எல்லாம் சரி செல்ஃபி கை இருப்பது உங்களுக்குத்தெரியுமா?
செல்ஃபி கை என்றால் அழகாக சுயபடங்களை எடுப்பதற்கான செல்ஃபி ஸ்டிக் தான். ஆனால் வழக்கமான ஸ்டிக் வடிவில் இல்லாமல் இது மனிதக் கை வடிவில் இருக்கும்.
ஆக இதைக் கையில் வைத்துக்கொண்டு படம் பிடித்தால் தனியே எடுத்துக்கொண்டது போல இல்லாமல் யாரோ நண்பருடன் கை பிடித்து எடுத்துக்கொண்டது போல நட்பான தோற்றம் தரும். ஜஸ்டின் குரோ மற்றும் அரிக் ஸ்னீ ஆகிய நவீன வடிவமைப்பாளர்கள் இதற்கான முன்னோட்ட வடிவை உருவாக்கியுள்ளனர். ஆனால் இது ஒரு கலைப்படைப்பு போல்தான்.
இந்தத் தயாரிப்பைச் சந்தையில் எல்லாம் பார்க்க முடியாது. இணைய யுகத்தில் நமது இருப்பை எப்போதும் உணர்த்திக்கொண்டிருக்கும் தன்மையைப் பகடி செய்யும் விதமாக இதை வடிவமைத்துள்ளனராம்.
வடிவமைப்பில் எப்படி எல்லாம் புதுமையாக யோசிக்கிறார்கள் பாருங்கள்!