

செல்போன் சேவை வர்த்தகத்தை மைக்ரோசாப்டிடம் விற்ற பிறகு நோக்கியா இனி இந்தப் பிரிவு பக்கமே வர வாய்ப்பில்லை என்று கருதப்பட்டது. இதற்கு மாறாக நோக்கியா மீண்டும் ஸ்மார்ட் போன் பிரிவில் அடியெடுத்து வைக்கலாம் எனும் தகவல் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
மைக்ரோசாப்ட் ஒப்பந்தப்படி இந்த ஆண்டு இறுதிவரை நோக்கியா ஸ்மார்ட் போன் பிரிவில் நுழைய முடியாது. எனவே அடுத்த ஆண்டில் நோக்கியா ஸ்மார்ட் போன் பிரிவில் மீண்டும் பிரவேசிக்கலாம் என ரீகோட் (>http://recode.net/) இணையதளம் தெரிவித்துள்ளது.
நோக்கியா தனது புதிய சாதனத்தை வடிவமைத்து உருவாக்கி அதை விற்பனை செய்து விநியோகிக்கும் உரிமையைப் பிற நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நோக்கியா ஆண்ட்ராய்டு இசட் லாஞ்சர் செயலி மற்றும் என் ஒன் டேப்லெட்களை சீனாவில் அறிமுகம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர மெய்நிகர் தன்மை என்று சொல்லப்படும் வர்சுவல் ரியாலிட்டி பிரிவிலும் நோக்கியா பெரிய அளவிலான திட்டங்களை வைத்திருக்கிறதாம்.