

ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் முன்பதிவின்போதே விற்றுத் தீர்ந்துவிட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி பத்தாம் தேதி ஸ்மார்ட் வாட்ச் ஆப்பிள் அபிமானிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இணையம் மூலம் முன்பதிவு விற்பனையும் தொடங்கியது.
24-ம் தேதி முதல் வாட்சுகள் அனுப்பிவைக்கப்படும் எனும் நிலையில் அரை மணி நேரத்திலேயே முதல் நாள் டெலிவரிக்கான முன்பதிவு முடிந்துவிட்டதாகவும் அடுத்த சில மணி நேரங்களில் எல்லா மாதிரிகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக் பெருமையுடன் தெரிவித்தார்.
ஆக ஆப்பிள் வாட்சுகள் கையில் கிடைக்க ஜூன், ஜூலை வரைகூடக் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க முன்பதிவு பெற்றவர்களில் பலர் இபே இணையதளத்தில் அதை ஒன்றுக்குப் பல மடங்கு விலையில் ஏலத்துக்கு விட்டிருப்பதும் நடந்திருக்கிறது.
ஆரம்ப வரவேற்பு என்னவோ அற்புதமாக இருந்தாலும் முதலில் வாங்கியிருப்பவர்கள் எல்லாம் ஆப்பிள் அபிமானிகள்தான், இதில் வியப்பில்லை என்கிறனர். இவர்களைத் தாண்டிப் பொதுப் பிரிவினரை ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் எந்த அளவுக்குக் கவர்கிறது என்று பார்க்கலாம்!