

எப்போதும் ஸ்மார்ட் போனும் கையுமாக இருப்பவர்கள்; ஸ்மார்ட் போன் இல்லாவிட்டால் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை எனப் பரபரக்கிறவர்கள்... இத்தகைய ஸ்மார்ட் போன் அடிமைகளில் நீங்களும் ஒருவராகிவிட்டீர்களா? இதைக் கண்டறிய எளிய முறை ஒன்று இருக்கிறது.
60 நொடிக்கு ஒரு முறை ஸ்மார்ட் போனைப் பார்க்கும் பழக்கம், டெம்பிள் ரன் அல்லது கேண்டி கிரஷ் போன்ற விளையாட்டுகளை அடிக்கடி விளையாடுவது, வாட்ஸ் அப் போன்ற சேவைகளில் தீவிரம் காட்டுவது, இயர்போன்களைப் பயன்படுத்துவது மற்றும் செல்ஃபிக்களை எடுப்பதில் தணியாத தாகம் கொண்டிருப்பது ஆகிய ஐந்து பழக்கங்கள் இருந்தால் ஸ்மார்ட் போன் அடிமை என்று சொல்லலாம்.
இந்த அம்சங்கள் அனைத்தும் இருந்தாலும் உடனே கவலைப்பட வேண்டாம். ஏனெனில் இந்த ஐந்து அம்சப் பட்டியல் ஆய்வு அடிப்படையிலான முடிவு அல்ல; டெக் ஒன் (>http://techone3.in/ ) இணைய தளம் ஸ்மார்ட் போன் அடிமைகளைக் கண்டறியப் பட்டியலிட்டுள்ள அம்சங்களே இவை.
ஆனால் இந்தக் குறிப்புகளை அலட்சியமும் செய்ய வேண்டாம். கொஞ்சம் ஸ்மார்ட் போன் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வதும் நல்லது அல்லவா!