

மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் என்று அழைக்கப்படும் கேட்ஜெட் திருவிழாவில் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் முக்கிய அறிமுகங்களை நிகழ்த்திக் கவனத்தை ஈர்த்தன.
2-ம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சியில் சாம்சங் நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி எஸ்.6, கேலக்ஸி எஸ் 6 எட்ஜ் ஆகிய போன்களை அறிமுகம் செய்தது. போன் மூலம் பணம் செலுத்தும் சாம்சங் பே சேவையும் அறிமுகம் செய்யப்பட்டது.
சீன ஸ்மார்ட் போன் நிறுவனமான ஜியோனி , Elife S7 போனை அறிமுகம் செய்தது. 5.2 அங்குல அகலம் மற்றும் 5.5 மி.மி. பருமன் கொண்ட இது ஆண்ட்ராய்டு லாலிபாப்பில் இயங்குகிறது.
லெனோவோ வைப்ஷாட் எனும் புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது. காமிரா போன்ற தோற்றம் கொண்ட இதன் வடிவமைப்பு பெரிதாகப் பேசப்பட்டது. அதற்கேற்ப காமிராபோன் என்றே இது குறிப்பிடப்பட்டது. இது தவிர டால்பி அட்மோஸ் ஒலிநுட்பம் கொண்ட ஏ 7000 போனும் அறிமுகமானது.
சோனி நிறுவனம் எக்ஸ்பிரியா இசட் 4 டேப்லெட்-ஐ அறிமுகம் செய்ததுடன் எக்ஸ்பிரியா எம் 4 அக்வா எனும் ஸ்மார்ட் போனையும் அறிமுகம் செய்தது. இதுவும் ஆண்ட்ராய்டு லாலிபாப்பில் இயங்குகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இரண்டு புதிய லூமியா மாதிரிகளை அறிமுகம் செய்தது. புதிய போன் இனி விண்டோஸ் 10-ல்தான் வரும் என்றும் தெரிவித்தது.
இவை தவிர புதிய ஸ்மார்ட் வாட்சுகளும் கவனத்தை ஈர்த்தன. கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டன.