

பைக் நிறுத்த இடவசதி இல்லையே என்று கவலைப்படத் தேவையில்லை என்கிறது ஒரு நிறுவனம். ஆம் இந்த நிறுவனம் வடிவமைத்துள்ள இரண்டு சக்கர வாகனத்தை அப்படியே மடக்கி வீட்டின் ஒரு மூலையில் வைத்து விடலாம். எலெக்ட்ரிக் பவரில் இயங்கும் இந்த பைக் மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.
பேட்டரி தீர்ந்துவிட்டால் கவலை வேண்டாம் காலால் பெடல் செய்யலாம்.
இந்த பைக்கில் உள்ள சிறிய மானிட்டர் மூலம் இன்டர்நெட் தொடர்பு எடுத்துக் கொள்ளலாம். எத்தனை கிலோ மீட்டர் வந்திருக்கிறோம். நேரம் போன்றவற்றை சொல்ல ஸ்பீக்கர்களும் இந்த மடக்கும் பைக்கில் உள்ளன.
கான்செப்ட் கார்
சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஒவ்வொரு வருடமும் புதிய தொழில் நுட்ப யோசனைகள் உருவாகிக் கொண்டேதான் இருக்கிறது. இந்த கான்செப்ட் கார் யோசனை ஏற்கெனவே வந்ததுதான் என்றாலும் இதற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.
இருவர் மட்டும் செல்லும் இந்த எலெக்ட்ரிக் காரை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. முற்றிலும் எலெக்ட்ரானிக் முறையில் இயங்கும். ஸ்டியரிங் தனியாக இருக்காது. பக்கவாட்டிலிருந்து வரும் ஒரு இணைப்பின் மூலம் சிறிய மானிட்டர் இருக்கும்.
இந்த மானிட்டர் மூலம் வாகனத்தை இயக்க வேண்டியதுதான். செவர்லே நிறுவனமும் இதுபோன்ற கார் தயாரிப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
மிகச்சிறிய டிரில்லர்
பெரிய இயந்திரங்களில் செயல்படும் தொழில்நுட்பத்தை சிறிய இயந்திரங்களுக்குள் கொண்டு வருவது சற்று சிரமம்தான். அந்த வகையில் டிரில்லிங் இயந்திரத்தை நியூசிலாந்தைச் சேர்ந்த ஒருவர் உருவாக்கியுள்ளார். 17 மி.மீ உயரம் கொண்ட இந்த துளையிடும் இயந்திரம் 3 டி தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்கிறார்.
3டி முறையில் தயாரிக்கப்படும் நகைகள், கைவினை தயாரிப்புகளுக்கு இந்த கருவி பயன்படும். இந்த இயந்திரத்திலேயே இதற்கான பேட்டரி மற்றும் சிறிய அளவிலான பட்டன் மற்றும் மானிட்டர் உள்ளது. ஒயர்கள் மற்றும் ஹெட்போன் கேபிள் சிறிய பேட்டரி கொண்டு இதை உருவாக்கியுள்ளார். நிமிடத்துக்கு 1 செமீ வரை துளையிடும் திறன் கொண்டது இந்த சிறிய டிரில்லர்.