Last Updated : 12 Mar, 2015 03:15 PM

 

Published : 12 Mar 2015 03:15 PM
Last Updated : 12 Mar 2015 03:15 PM

ஆபாச பழிவாங்கல் செயல்களுக்கு ட்விட்டர் தடை

தனக்குப் பிடித்தாவர்கள் குறித்து ஆபாசத் தகவல்கள், படங்கள், வீடியோக்களைப் பரப்பும் செயல்களில் வரம்புமீறி ஈடுபடுவோருக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் மேற்கொண்டுள்ளது.

இணையத்தில் தனிமனித தாக்குதல்கள் முதலானவை அடங்கிய சைபர் புல்லிங்கை ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே ட்விட்டர் இந்தப் புதிய தடையை விதித்துள்ளது.

பிரபல குறும்பதிவு தளமான ட்விட்டரில் அதிக அளவில் வரம்பு மீறிய சைபர் புல்லிங் செயல்கள் நடப்பதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.

முக்கியமாக குறிப்பிட்ட நபரை பழிவாங்கும் நோக்கத்தோடு, அவர்களது அந்தரங்க படங்களை முறைகேடாக வெளியிட்டு பரப்பச் செய்வது போன்ற குற்றங்கள் அதிக அளவில் இருப்பதாக ட்விட்டர் நிறுவனத்துக்கு புகார்கள் குவிந்து வந்தன.

இந்த நிலையில், ட்விட்டரில் பயனாளர்கள் மற்றவர்களின் ஆபாசப் படங்கள், வீடியோக் காட்சிகளை அவர்களது அனுமதி இன்றி வெளியிடுவது தடை செய்யப்படுகிறது. நிலைப் பதிவுகள் அனைத்தும் வரம்புக்கு உட்படுத்தப்படும்" என்ற அறிவிப்பையும் ட்விட்டர் வெளியிட்டுள்ளது.

நட்புடன் பழகியவர்கள் தங்களது உறவு முறிந்தவுடன் முன்னாள் சிநேகிதத்தைப் பழிவாங்கும் வகையில், பழகிய காலத்தில் எடுக்கப்பட்ட நினைவுப் பதிவுகளை ஆபாசமாக வெளியிட்டு பழிதீர்க்கும் செயல்களில் ஈடுபடுவது இப்போது பெருகிவருகிறது. அவற்றைப் பகிர்வதற்கான களமாக ட்விட்டரை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பல அந்தரங்க விஷயங்கள் இணையத்தில் பகிரங்கமாக அம்பலாகி சம்பந்தப்பட்டவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்தப் போக்கை வெகுவாக கட்டுப்படுத்தவதற்கு, ட்விட்டர் தளத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நெருக்கடி மிகுதியானது.

கடந்த மாதம் ட்விட்டரில் முறைகேடாக கசியவிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் உள்விவகாரமும் ட்விட்டருக்கு நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், "முறைகேடுகள் மற்றும் சம்பந்தமில்லாத பதிவுகளால் சிக்கித் தவிக்கிறோம்" என்று சைபர் புல்லியிங் சங்கடங்கள் குறித்து தலைமை நிர்வாக அதிகாரி ட்க் காஸ்டெலோ குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x