

ஸ்மார்ட் போன் பேச மட்டும் அல்ல; புகைப்படம் எடுக்கவும் தான் அதிகம் பயன்படுகிறது. சுய படங்களை எடுத்துத் தள்ளுவது தவிரப் பலரும் ஸ்மார்ட் போனில் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்கின்றனர். எல்லாம் சரி, இன்ஸ்டாகிராமில் கண்ணைக் கவரும் வகையிலான புகைப்படங்களை எடுப்பது எப்படி? இந்தக் கேள்விக்கான பதில்களை அழகான வரைபடச் சித்திரமாக (இன்போகிராபிக்) பிரபல ஹோட்டல் ஒன்று வெளியிட்டிருக்கிறது.
ஃபேர்மான்ட் ஹோட்டல்ஸ் வெளியிட்டுள்ள அந்த வரைபடச் சித்திரத்தில் பொதுவாகப் புகைப்படக் கலை நுட்பங்களும், குறிப்பாக ஸ்மார்ட் போனில் படமெடுப்பதற்கான நுட்பங்களும் விளக்கப்பட்டுள்ளன. பக்கம் பக்கமாகப் படிக்காமல் இந்த ஒரு வரைபடத்தைப் பார்த்தே புகைப்படக் கலைக்கான அடிப்படை நுட்பங்களைத் தெரிந்துகொண்டுவிடலாம். இயற்கைக் காட்சிகளைப் படமெடுத்தாலும் அதில் மனிதர்கள் இருப்பது போலப் பார்த்துக்கொண்டால் உயிரோட்டமாக இருக்கும், ஏதேனும் ஒளி தரையில் பட்டு எதிரொலிப்பதைத் தவிர்க்க எப்போதும் முடிந்த அளவு தரையில் இருந்து உயரமாகப் படம் எடுங்கள் போன்ற குறிப்புகள் இதில் உள்ளன. புகைப்படங்களுக்கான செயலிகள் பற்றிய குறிப்புகளும் இருக்கின்றன. வரைபடச் சித்திரத்தைப் பார்த்து ரசிக்க, கற்றுக்கொள்ள: >http://www.fairmont.com/infographics/world-through-lens-travel-photography/