

ஆன்லைன் விற்பனையில் கவனத்தை ஈர்த்த சீன நிறுவனமான ஜியோமி, இந்தியச் சந்தையில் தனது இணையதளம் மூலமே போன்களை விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது. தற்போது ஜியோமி முன்னணி மின் வணிகத் தளமான பிளிப்கார்ட் மூலம் போன்களை விற்பனை செய்கிறது. இந்த ஏற்பாடு தொடரும் என்றாலும், இந்தியச் சந்தையில் இருப்பு வசதி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் அமைப்பை வலுவாக்கிய பிறகு தனது இணையதளம் மூலமே போன்களை விற்பனை செய்ய இருப்பதாக இந்தியாவுக்கான நிறுவனத் தலைவர் மனு ஜெயின் கூறியுள்ளார்.
இதுவரை ஜியோமி இந்தியா மற்றும் இந்தோனேசியா தவிர மற்ற நாடுகளில் தனது இணையதளம் வாயிலாகத் தான் போன்களை விற்றிருக்கிறது. சமீபத்தில் தனது எம்.ஐ 4 ஸ்மார்ட் போனை இந்தியாவில் ரூ.19.999 விலைக்கு அறிமுகம் செய்திருக்கிறது. இதை 10ம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் வாங்கலாம். வழக்கம் போலப் பிளேஷ் சேல் தான்.