

செல்ஃபி எனப்படும் சுயபடங்கள் ஸ்மார்ட் போன் கால சங்கதி. ஆனால் டிஜிட்டல் யுகம் பிறப்பதற்கு முன்பே பழைய கேமராக்கள் காலத்திலேயே சுயபடங்கள் எடுக்கப்பட்டது பற்றி ஆச்சர்யப்படும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. உலகின் முதல் செல்ஃபி பற்றி எல்லாம் கூடப் பேசப்படுகிறது. ஆரம்ப கால காமிராக்களிலேயே சுயபடங்கள் எடுக்கப்பட்டதுகூட வியப்பில்லை, ஆனால் செல்ஃபி ஸ்டிக் அந்த காலத்திலேயே இருந்ததாகச் சொல்லப்படுகிறது
சுயபடம் எடுக்க வசதியாகக் கைக்கு முன்னால் ஸ்மார்ட் போனை வாகாக வைத்துக்கொள்ள உதவும் செல்ஃபி ஸ்டிக் முற்றிலும் நவீன கால கண்டுபிடிப்பு என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், 1926-ல் இங்கிலாந்தில் வார்விக்ஷயர் பகுதியைச் சேர்ந்த ஆர்னால்டு ஹாக் என்பவர் சுயபடம் எடுப்பதற்கு இத்தகைய செல்ஃபி ஸ்டிக் ஒன்றைப் பயன்படுத்தியிருக்கிறார் தெரியுமா?
அவர் மனைவியுடன் சுயமாக எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தில் கையில் ஒரு குச்சியைப் பிடித்துக்கொண்டிருக்கும் காட்சியும் பதிவாகி இருக்கிறது. அவரது பேரன் ஆலன் கிளிவர் சமீபத்தில் குடும்ப ஆல்பத்தில் இந்த புகைப்படத்தைக் கண்டெடுத்திருக்கிறார் .
தாத்தா மட்டும் இந்த ஸ்டிக்கிற்கு காப்புரிமை வாங்கியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்றும் பேரன் ஏக்கம் தெரிவித்திருக்கிறார்.