

ஸ்மார்ட் போன் நவீன வாழ்க்கையின் அம்சங்களில் ஒன்றாகி அதன் பயன்பாட்டு எல்லை விரிந்துகொண்டே போகிறது. இன்னொரு பக்கத்தில் ஸ்மார்ட் போன் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மருத்துவ ஆய்வின் அடிப்படையிலான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் பல கவலை தரும் வகையிலும் இருக்கின்றன. சமீபத்திய ஆய்வு, ஸ்மார்ட் போனால் மூளையில் ஏற்படும் தாக்கத்தை விவரிக்கிறது.
சுவிட்சர்லாந்தின் ஸுரிச் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய இந்த ஆய்வு ஸ்மார்ட் போன் பயன்பாடு மூளையின் வடிவத்தையே மாற்றும் தன்மை கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது. ஸ்மார்ட் போனை தினசரி தீவிரமாகப் பயன்படுத்துபவர்கள் மூளையில் சோமடோசென்சாரி கார்டெக்ஸ் எனும் பகுதி பெரிதாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்குக் காரணம் ஸ்மார்ட் போனில் மிகவும் விரும்பப்படும் டச் ஸ்கிரின் அம்சம் தான். மூளையின் இந்தப் பகுதிதான் கட்டை விரல் இயக்கத்துக்கு காரணமாக இருக்கிறது. ஸ்மார்ட் போனை அதிக அளவில் பயன்படுத்தும் போது மூளைக்கும் கட்டைவிரலுக்கும் இடையிலான தொடர்பும் அதிகரிப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.
டாக்டர்.அர்கோ கோஷ் (Dr Arko Ghosh) தலைமையிலான குழு 37 பயனாளிகளை கொண்டு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இதில் 27 பேர் டச் ஸ்கிரினும் கையுமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 10 பேர் சாதாரண போனைப் பயன்படுத்தியிருக்கின்றனர். ஆய்வுக் காலத்தில் அவர்களின் மூளை செயல்பாடு இசிஜி மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
இதன் பயனாகத் தான் ஸ்மார்ட் போன் பயன்பாடு மூளையின் வடிவம் மற்றும் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டது. செல்போனில் சாதாரண பட்டன்களை அழுத்தும்போது மூளைக்கு அதிக வேலை தேவைப்படவில்லை. ஆனால் டச் ஸ்கிரினை இயக்குவது சிக்கலான வேலையாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஸ்மார்ட் போன் பயன்பாட்டால் ஏற்படும் மாற்றங்கள் வியப்பை அளிப்பதாக டாக்டர்.கோஷ் கூறுகிறார்.