

மைக்ரோமேக்ஸ் யூ பாணியில், சீன நிறுவனமான லெனோவோ தனி பிராண்டில் புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தனி பிராண்டை ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்ய இருக்கிறதாம். ஆன்லைன் மூலமான பரபரப்பை ஏற்படுத்திய ஜியோமிக்குப் போட்டியாக லெனோவோ உருவாக்கும் இந்தப் புதிய பிராண்டுக்கு ஷென்கி எனப் பெயரிட்டுள்ளதாம்.
லெனோவோ தன் கவனத்தைக் கணினி தயாரிப்பில் இருந்து ஸ்மார்ட் போன் சந்தைக்கு மாற்றி வரும் நிலையில் இந்தப் புதிய பிராண்ட் பற்றிய செய்தி வெளியாகி உள்ளது. இது பற்றி வரும் மாதங்களில் மேலும் விவரங்கள் கசியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
லெனோவோ ஏற்கனவே மோட்டோரோலா நிறுவனத்தைக் கையகப்படுத்தியிருக்கும் நிலையில் புதிய போனுக்கான திட்டம் பல சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்புகிறது. எனினும் நிறுவனம் இதுவரை அதிகாரபூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. ஸ்மார்ட் போன் சந்தையில் புதிய வரவுகளும் போட்டியும் மேலும் அதிகரிக்கப்போகிறது என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. இதனிடையே லெனோவோவின் ஏ 6000 ஸ்மார்ட் போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியிருக்கிறது. ரூ.6999 விலையில் இந்த 4ஜி போன் யூ மற்றும் ஜியோமி போட்டியைச் சமாளிக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.