

தன்னைத் தானே புகைப்படம் எடுத்து வெளியிட்டுக் கொள்ளும் சுயபட (செல்ஃபீ) கலாச்சாரத்தை நீங்கள் விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி, ஸ்டீவ் ஸ்வான்சனின் சுயபடத்தை நிச்சயம் வியந்து பாராட்டுவீர்கள். ஏனெனில், இது வழக்கமான சுயபடம் அல்ல; சாதனை சுயபடம்!
ஆம், விண்வெளியில் இருந்து இன்ஸ்டாகிராம் செய்யப்பட்டுள்ள முதல் புகைப்படம் இது. அமெரிக்க விண்வெளி வீரரான ஸ்டீன் ஸ்வான்சன் விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) சென்றிருக்கிறார். விண்வெளி ஆய்வு மைத்தில் இருந்துதான் அவர் தன்னை புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டகிராம் புகைப்பட பகிர்வு சேவை மூலம் வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 7-ம் தேதி வெளியிடப்பட்ட இந்தப் புகைப்படம் விண்வெளியில் இருந்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட முதல் புகைப்படம் எனும் சிறப்பை பெற்றிருக்கிறது.
ஸ்டீவன்சன், விண்வெளி மையத்தில் மிதந்தபடி காட்சித் தரும் இந்தப் புகைப்படத்தை அவரே எடுத்து வெளியிட்டிருக்கிறார். அதாவது சுயபடமாக வெளியிட்டிருக்கிறார். 'ஐ.எஸ்.எஸ்-சுக்கு திரும்பி வந்திருக்கிறேன், இங்கு வாழ்க்கை நன்றாக இருக்கிறது' எனும் புகைப்பட குறிப்பையும் அதனுடன் இணைத்திருக்கிறார். ஸ்வான்சன் புன்னகைத்துக்கொண்டிருக்கும் இந்தப் புகைப்படம் விண்வெளி மையத்தில் வாழ்க்கையை எடுத்துக்காட்டும் வகையில் இருக்கிறது. அதனால் உற்சாகம் அளிக்கிறது.
இன்ஸ்டாகிராம் புகைப்பட பகிர்வு சேவை மிகவும் பிரபலமாக இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் நட்சத்திரங்கள் முதல் சாமானியர்கள் வரை பல தரப்பினரும் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கில் புகைப்படங்கள் பகிரப்பட்டு பார்த்து ரசிக்கப்படுகின்றன. இருந்தாலும் கூட விண்வெளியில் இருந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிடப்பட்டிருப்பது விஷேசமானது.
ஏற்கெனவே விண்வெளியில் இருந்து ட்விட்டர் செய்தி பகிரப்பட்டது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம். நாசாவின் மைக் மாரிமொனோ (Mike Massimino) எனும் விண்வெளி வீரர் கடந்த 2009-ம் ஆண்டு விண்வெளியில் இருந்து முதல் ட்விட்டர் செய்தியை வெளியிட்டார். அவரது ட்விட்டர் கணக்கு: @Astro_Mike
இப்போது ஸ்வான்சன் விண்வெளியில் இருந்து சமூக ஊடக உலகிற்கு அடுத்த பாய்ச்சலை இன்ஸ்டாகிராம் படம் மூலம் செய்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் சரவ்தேச விண்வெளி மையத்திற்காக அமைக்கப்பட்டுள்ள கணக்கு மூலம் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவரும் ரஷ்யாவைச் சேர்ந்த சக விண்வெளி வீரரகள் இருவருமாக சேர்ந்து கடந்த ஜனவரியில் இன்ஸ்டாகிராம் கணக்கை துவக்கினர். விண்வெளி பயணத்திற்கு தயாராகும் புகைப்படங்களை அதில் பகிர்ந்து வந்தனர். இப்போது விண்வெளியில் இருந்தே படம் வந்து விழுந்துள்ளது.
ஸ்வான்சன் மேலும் சில புகைப்படங்களையும் விண்ணில் இருந்து வெளியிட்டிருக்கிறார். தொடர்ந்து அவரிடம் இருந்து விண்வெளி புகைப்படங்களை எதிர்பார்க்கலாம். விண்வெளி வீர்ர்களின் புகைப்படத்தை பார்த்து ரசிப்பது விஞ்ஞான ஆர்வலர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியானது. அப்படி இருக்க வீரரகள் விண்வெளியில் இருக்கும் காட்சியை அங்கிருந்தே பார்க்க முடிவது நிச்சயம் வியப்பானது தான்.
விண்வெளி வீரர்களுக்கு இந்த இன்ஸ்டாகிராம் பழக்கம் தேவையா என்று கேட்க நினைக்கலாம். ஆனால், விண்வெளி ஆய்வு தொடர்பான தகவல்களை பொதுமக்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு விண்வெளி ஆய்வில் விருப்பத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகத்தை பயன்படுத்தும் பரவலான முயற்சியின் ஒரு அங்கமாகவே இது அமைந்துள்ளது.
சமூக ஊடகம் வாயிலாக மக்களுடன் விண்வெளி ஆய்வு பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்வதில் அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகமான 'நாசா' தீவிரமாக உள்ளது. நம்முடைய இஸ்ரோ அமைப்பும் சமூக ஊடகத்தை பயன்படுத்துவதில் முனைப்புடன் இருக்கிறது.
ஸ்வான்சன் இன்ஸ்டாகிராம் மூலம் வெளியிடுள்ள புகைப்படம் இணையவாசிகள் மத்தியிலும் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. 8000 பேருக்கு மேல் அந்தப் புகைப்படத்தை லைக் செய்துள்ளனர். பலர் பின்னூட்டம வாயிலாக கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். அதில், சிலர் தாங்களும் விண்வெளி வீரராக வேண்டும் எனும் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இத்தகைய ஆர்வத்தை ஏற்படுத்துவதே தானே இந்த முயற்சியின் நோக்கமாக இருக்க வேண்டும்.
ஸ்டீவ் ஸ்வான்சன் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்க்க: >http://instagram.com/iss
சைபர்சிம்மனின் வலைத்தளம்>http://cybersimman.wordpress.com/