பிஎஸ்எல்வி சி-24 ராக்கெட் நாளை மறுநாள் ஏவப்படுகிறது: 58 மணி நேர கவுண்டவுன் இன்று தொடக்கம்

பிஎஸ்எல்வி சி-24 ராக்கெட் நாளை மறுநாள் ஏவப்படுகிறது: 58 மணி நேர கவுண்டவுன் இன்று தொடக்கம்
Updated on
1 min read

கடல் எல்லைகளை கண்காணிக்கவும், விமானங்கள் மற்றும் தரையில் செல்லும் வாகனங்களை கண்காணிக்கவும் உதவும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி என்ற செயற்கைக் கோள், பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 4-ம் தேதி மாலை விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 58 மணி நேர கவுன்ட் டவுன் இன்று (புதன்கிழமை) காலை தொடங்குகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இரு வகை ராக்கெட்களைத் தயாரித்து செயற்கைக் கோள்களுடன் விண்ணில் ஏவிவருகிறது. கடந்த ஜூலை 1-ம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ என்ற செயற்கைக் கோளை இஸ்ரோ தயாரித்து, அதை பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தியது.

இந்நிலையில், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி என்ற செயற்கைக் கோளை இஸ்ரோ தயாரித்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக் கோள் வரும் 4-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5.14 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

விண்ணில் ஏவப்பட்ட 20.4 நிமிடத்தில் செயற்கைக் கோள் அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும். இதற்கான 58 மணி 30 நிமிட கவுன்ட் டவுன் இன்று (புதன்கிழமை) காலை 6.44 மணிக்கு தொடங்குகிறது.

கடல்வழி ஆராய்ச்சி, இயற்கை பேரிடர் காலங்களில் கடல் பயணம் மற்றும் தகவல் தொடர்புக்கு ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1பி செயற்கைக் கோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன்மூலம் கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும்.

மேலும், தரையில் செல்லும் வாகனங்கள், வான்வெளியிலும் செல்லும் விமானங்கள் போன்றவற்றை கண்காணிக்கவும் பயன்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in